பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வ.சுப.மா. வாழ்க்கை வரலாறு


முனைவர் இரா. சாரங்கபாணி

சிறப்புநிலைப் பேராசிரியர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


அண்ணாமலை யெனப் பிள்ளைத் திருநாமங் கொண்ட மாணிக்கனார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச் சிவபுரியில் 17.4.1917 இல் சுப்பையா செட்டியார்க்கும் தெய்வ யானை ஆச்சிக்கும் மகவாய்த் தோன்றினார். இளம்பருவத்திலே பெற்றோரை யிழந்த இவர் தம் பாட்டனாரால் புரக்கப் பெற்றார். பின் பர்மாவுக்குச் சென்று கடையிற் பணிபுரிந்தகாலை பொய் கூற வேண்டிய கட்டாய நிலை ஏற்படவே அப்பணி துறந்து தமிழ் பயிலத் தொடங்கினார். பண்டிதமணி கதிரேசனார் முதலியோர்தம் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பிற் பயின்று முதன்மையாகத் தேர்ச்சியுற்றார். சில திங்கள் அப் பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு மாணவராக விருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்பொழுதே தனிமையாகப் படித்துப் பீ.ஓ.எல்., எம்.ஏ. பட்டமும் 'தமிழில் அகத்திணைக் கொள்கைகள்' பற்றி ஆய்ந்து பிஎச்.டி. பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபதாண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து, தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் தொண்டாற்றினார். பின் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி யேற்றுத் தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல்துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணை நின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்த போது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்