பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. உணவும் மருந்தும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மக்கள் அன்றாட வாழ்வில் எழுந்த வாக்கு. இது பிற்காலத்தில் இலக்கிய வாக்காக, சான்றோர் வாக்காக, மாறிவிட்டது. பொதுவாழ்வில் பணியாற்றுபவர்கள் உள்ளத்தின் உறுதியும அறிவின் தெளிவும் கெடாமல் காத்துக் கொள்ள வேண்டும் . இதற்கு முக்கியமாக வேண்டப் படுவது நாவடக்கம். உடல் கெடாமல் இருப்பதற்குக் கண்டதை உண்னும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்; இது நாகரிகத்தின் விளைவாக வந்த விலங்குகளும் பறவைகளும் இயற்கையாகவே தம் உடலுக்கு ஏற்ற உணவையும் அதன் அளவையும் அறிந்து தின்கின்றன. அவற்றின் நாக்கும் அளவறிந்து உண்ணும் கருவியாக அமைந்துள்ளது. மக்கள் நாக்கும் தொடக்கத்தில் அந்த ஆற்றல் பெற்றிருந்தது. ஆனால் பகுத்தறிவும் எண்ணும் ஆற்றலும் வளர வளர. புலன்களின் இயற்கை ஆற்றல் குன்றிவிட்டது. அன்றியும் சமைத்து உண்ணும் செயற்கை உணவு முறை வேரூன்றிவிட்டபிறகு, இயற்கை ஆற்றல் இல்லா தொழிந்தது. ஆகையால், இன்று ஏற்ற உணவையும் ஏலாத உணவையும் உணர்ந்து அறிவிக்கும் ஆற்றல் நாக்கிற்கு இல்லை. இன்று வேக உணவுகள் (Fast food) எங்கும் பரவிய பிறகு நாக்கின் ஆற்றல் குறைவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது.