பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வான்சிறப்பு இயற்கையில் கடவுள் தன்மையைக் கண்டு போற்றுவது உயர்ந்த நெறி உலக நெறி. எச்சமயத்தார்க்கும் உரிய பொது நெறி. இங்குக் குறிப்பிடும் வான்' என்பது ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகக் குறிப்பிடப் பெறும் வான் அன்று. இது வேறு. ஆண் பெண் கூறாக சமயவாதிகள் கருதும் அம்மையப்பராக - உள்ள இயற்கையின் ஒரு கூறு மழை: இறைவனின் கருணை அது அம்மையின் அன்பு ஆற்றல். இந்த ஆற்றல் வான்மழையாகக் காலந்தோறும் நீர் பொழிந்து உலகை உய்விக்கின்றது. அம்மை தண்மை வடிவு உடைய வராதலால் தண்மைச் சான்றோர்க்காக மழை தண்மையாய்க் குளிர்ந்து பொழிகின்றது: உலகுக்கும் பேராதரவாயும் உள்ளது. மழையின் இயக்கங்கள் வியக்கத்தக்கன. அவை மாந்தர் கைக்கு அடங்காதன. ஆயினும் அது அவர்களின் மன வாக்கு காயங்களின் நேர்மைக்குப் பரிவு கொள்கின்றது: தகுதியாய்ப் பெய்கிறது. மேலுள்ள தனித்தன்மை வல்லமைப் பொருள் ஒன்றின் ஆணைப்படி அஃது இயங்குகின்றது. இந்த வான் மழையில் என்ன ஆற்றல் உள்ளது என்று நன்கு ஆராய்ந்து பார்த்து அமிழ்த ஆற்றல் உள்ளதென்று தேர்ந்து வான் சிறப்பு என்ற அதிகாரத்தை, வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று(2)