பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 179

வறுமை என்பது வலிமை இல்லாத நிலை என்று யாரும் எண்ணுவதில்லையே ? ஏன் என்று தான் எனக்குப் புரியவில்லை.

வலிமையில் வறுமை ஏற்படுகிறபோது தான், பொருள் வறுமையும் புகழ் வறுமையும், வாழ்வில் சுவை வறுமையும் மிகுதிப்படுகிறது. வலிமை குறைகிற போதுதான், வலிமையின்மை ஏற்பட்டு அதன் தொடர்பான நோய்களும் துயரமும் கூடுகின்றன என்றார் வள்ளுவர்.

நோய் தொடாத உடல் என்று எந்த உடலும் இல்லை. ஆனால், உள்ளுக்குள்ளே உறைந்து கிடக்கும் ; ஒடுங்கிக் கிடக்கும் நோய்களை, மேலே எழவிடாதபடி, அழுத்தி வைத்து ஆட்சி செய்யும் திறன் ஒவ்வொருவரிடமும் உண்டு. அந்த அற்புத நிலையைத் தான் வலிமை என்று நாம் வாயாரக் கூறுகிறோம்.

நோய் என்றாலே துன்பம் என்று பொருள். அந்த நோயை நான் சுமை என்றும், குற்றம் என்றும், இன்னும் பல்வேறு பெயரிட்டும், என் குறள்களில் பாடியிருக்கிறேன்.

நோய் ஏன் ஏற்படுகிறது என்று உங்களுக்கு விளக்குவதற்கு முன்னதாக, நோய் என்னும் சொல்லுக்குரிய பொருளைப் பற்றி விளக்கினால், நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.