பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அழுக்காறாமை

இல்லறவாழ்க்கை இனிது நடப்பதற்கு அழுக்காறு என்னும் பொறாமை அறவே கூடாது. அழுக்காறாமையை ஒரு சிறந்த ஒழுக்காறாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். அழுக்காறுடையவர் ஒழுக்கமுடையவராகக் கருதப்படமாட்டார். பிறர் உடைமையைக் கண்டு பொறாமைப்படுவதால் நமக்கு வரக்கூடிய நன்மை ஒன்று மில்லையாதலானும், அதனால் மனவெரிச்சலும் புழுங்கலும் உண்டாக, அதனால் நோய், கெட்ட பெயர், துன்பம் முதலியன உண்டாமாதலானும் பொறாமை கூடாது.

ஒருவர் தாம் பல பேறுகளைப் பெற வசதியும் வாய்ப்பும் அதற்கேற்ற சூழ்நிலையும் அமையாமற்போயினும், பெற்றிருப்பவர்களை நோக்கிப் பொறாமைப் படாமல் இருப்பாரே யானால், அப்பண்பே எல்லாவற்றினும் சிறந்த பேறாகக் கருதப்பெறும். மாடமாளிகை-கூட கோபுரத்தில் வாழ்பவனைக் கண்டு பொறாமையால் மனம் புழுங்காமல், தன் குடிசையே தனக்குப் பெரிது என்னும் அமைதி ஒருவனுக்கு இருந்தால், எந்தப் பேறு இல்லாதவனாக அவனைக் கருதமுடியும்? பொறாமை இல்லாத அவனது அமைதியே, எல்லாப் பேறும் அவனுக்கு இருப்பது போன்ற ஓர் உணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருக்குமன்றோ? மற்று, ஒருவன் தன்னை மேன்மேலும் வளர்ச்சி செய்வதை இக்கருத்து தடுக்கவில்லை. பிறனைக் கண்டு வயிறு