பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 185

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது போல, கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல, பிறருடைய பொருளை எடுத்து உதவி செய்யக் கூடாது; ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதையறிவிக்கவே, ‘தாளாற்றித் தந்த பொருள்’ என்றார் ஆசிரியர். சிறிது உதவினால் போதாது, பெரிதும் உதவ வேண்டும் என்பதற்காகப் “பொருளெல்லாம்’ என்றார்.

பொருளெல்லாவற்றையும் பிறர்க்குக் கொடுத்து விட்டால் தாம் என்ன செய்வது?-என்று சிலர் வினவலாம். தமக்கு வேண்டியதைச் செய்து கொள்வதைப் பற்றி வள்ளுவர் தடுத்துப் பேசவில்லை. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்டுப் போகாதீர்கள்!-என்றுதான் ஆசிரியர் அறிவிக்கிறார். விரும்பியவர் தமக்கின்றிப் பிறர்க்குக் கொடுத்துவிடுவதை யும் அவர் தடுத்தாரில்லை.

உள்ளது போனாலும் மேன்மேலும் தாளாற்றித்தரும் வன்மை இருப்பவர் பிறர்க்குக் கொடுத்துக்கொண்டே யிருக்கலாம் - என்பதுதான் வள்ளுவர் நோக்கம். ஊறும் வல்லமையுடைய கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டே யிருப்பது பயனுடைய செயல்தானே?

எங்கேயோ தேவர் இருப்பதாக ஓர் உலகம் சொல்லு கிறார்களே - அந்தத் தேவ உலகத்திலும் சரி, இவ்வுலகத் திலும் சரி, ஒப்புரவைப்போல் உயர்ந்த வேறொரு பண்பு இருக்க முடியாது. எல்லாப் பண்புகட்குள்ளும் - செயல்கட் குள்ளும் ஒப்புரவே உயர்ந்தது.