பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வள்ளுவர் இல்லம்

கொடுத்துக் கொடுத்துப் பழக்கப்பட்ட உயர் பண்புடைய மக்கள், உண்மையிலேயே தம்மிடம் இல்லை என்றாலும், ‘இல்லை என்று வாய் கூசாது எப்படிக் கூறுவார்கள்? கேட்பவனும் தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லித்தான் கேட்கிறான். அதே இல்லை என்னும் சொல்லைத் தாங்களும் சொன்னால், பின்னர் அவனுக்கும் தங்களுக்கும் என்ன வேறுபாடு? எனவேதான், தம்மிடம் இருப்பின் கொடுத்து விடுகிறார்கள்; இல்லையெனின் வெளிப்படையாக இல்லை என்று சொல்லாது போய்வா என்கின்றனர். ‘போய்வா’ என்பது உயர்ந்த பண்பாட்டின் பிறப்பன்றோ! எனவே, வந்தவன் இல்லை என்று கேட்பதற்கு முன்பு, உனக்கு என்ன வேண்டும் என்று தாமாகக் கேட்டு, இல்லை என்னாது அதனைக் கொடுத்து உதவுவதே உயர்ந்த இல்லறப் பண்பாகும்.

“இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள.’

நாம் சிலநேரத்தில் நமக்குள்ள எத்தனையோ கவலைகளை மறந்து ஒருவிதமாக ஆறுதலுற்று, கடற் கரையிலோ - பூங்காவிலோ - அல்லது இன்ன பிற இடங் களிலோ அமைதியாக அமர்ந்திருப்பதுண்டு. அந்நேரத்தில் பிணியாளி அல்லது உறுப்புக் குறைந்தவன் ஒருவன் நம்முன் வந்து நின்று, அம்மா! ஐயா! என்று குழைந்து கெஞ்சுவான். அப்போது இளகிப்போன இரக்கமுடைய நம் நெஞ்சம் என்னென்னவோ வேலை செய்கிறது; இப்படியும் ஒரு படைப்பு இருக்கவேண்டுமா? இறைவன் ஏன் இவனை இப்படி வைத்திருக்க வேண்டும்? மற்றவரைப்