பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 65

இரவலன் (பிச்சைக்காரன்) வந்து, ஒருகைப் பழையது வாங்கி உண்ணுவதைக் காணலாம்; பின் எட்டு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிவரையும் யாராவது வந்து அரிசி பெற்றுக்கொண்டு செல்வதைக் காணலாம்; அதற்குமேல் நண்பகலில் எவரேனும் சிறிதளவு சோறு பெற்றுக்கொண்டு செல்வதையும், இரண்டொருவர் குழந்தைச் சோறு வாங்கிக் கொண்டு போவதையும் காணலாம்; இரவிலும் இத்தகைய காட்சியைக் காணலாம். இந்நிகழ்ச்சிகள் நம் நாட்டில் ஏழை முதல் செல்வர்வரை பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்வன தாமே! இன்னும் சில குடும்பங்களில், பலர் வந்து பலநாளாக முழு உணவு உண்ணுவதையும் காணலாம். எனவே, இக்குடும்பங்கள் எல்லாம் பாழ்பட்டா விடுகின்றன? இல்லையே! மலருக்கு மணமும், விண்ணிற்கு வெண்ணிலாவும் சிறப்பளிப்பது போல, குடும்ப வாழ்க் கைக்குச் சிறப்பளிப்பது விருந்தோம்பலே. மணமில்லாத மலரையும் வெண்ணிலா இல்லாத விண்ணையும், விருந்தோம்பாத வீட்டினரையும் சில சமயங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். இம்முன்றைப் பற்றியும் உலகம் என்ன எண்ணுகின்றது, என்ன பேசுகின்றது, என்ன எழுதுகின்றது என்பதையும் நாம் அறிவோம். மேலும், பிறர்க்கு உதவுபவனை, உதவி பெற்றவர் - பெறாதவர் எல்லோரும் போற்றுவதையும், அவனுக்கு ஏதேனும் துன்பம் உற்றபோது பலர் முன்வந்து உதவுவதையும், உதவ முடியாவிடினும், ‘அவனுக்கு இதுதான் வேண்டும்’ என்று ஏளனம் செய்யாது இரக்கப்படுவதையும் வாழ்க் கையில் காண்கிறோம். எனவே அவனது வாழ்வு சரியாமல் மங்கலமாகப் பொலியும்!