பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

"குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”

என்கிறார். எவ்வளவு பண்பட்ட தந்தையுள்ளம் பாருங்கள்.

‘இன்று அவர் குழல்வாசித்தார். எவ்வளவு இனிமையாக இருந்தது’ என்று ஒருவர் கூறுகிறார். மற்றும் ஒருவர் வந்து, ‘இன்று இவர் யாழ் வாசித்தார். வெகு இனிமையாக இருந்தது' என்று கூறுகிறார். அவை இரண்டையும் கேட்டுவிட்டு, ஒரு தந்தை, சரி சரி, நீங்கள் உங்கள் குழந்தைகளின் மழலைச் சொற்களைச் கேட்டதில்லை போலிருக்கிறது, என்னுடைய குழந்தைகளின் மழலை மொழிகளே எனக்கு யாழ் ஓசை, குழல் ஓசையைவிட இனிமை பயக்கிறது' என்கிறார். வாழ்க்கையில் குழந்தைகளின் மழலைச் சொற்கள்தாம் மிகவும் இனிமை பயப்பவை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள்.

“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்”.

நம் நாட்டில் பெண் குழந்தைகள் மணலில் விளையாடி வீடு கட்டுவார்கள். ஆண் பிள்ளைகள், அம் மணல் வீடுகளை அழிப்பார்கள். இது தொன்று தொட்டுப் பழக்கம், மணலில் விளையாடிவிட்டு, அப்படியே வீட்டிற்கு வந்து, புழுதிபட்ட கையுடன் தன் தந்தை சாப்பிட்டுக்கொண் டிருக்கும் சோற்றை ஒரு குழந்தை அள்ளுகிறதாம். தன் குழந்தையின் கையென்ற காரணத்தால், அச்சோறு அசுத்தப் படுத்தப்படுவதாகக் கருதாமல், அத் தந்தையுள்ளம் அச்சோற்றை அமிழ்தைவிடச் சிறந்ததாகக் கருதுகின்றதாம். எவ்வளவு அன்பு நிறைந்த உள்ளம் பாருங்கள்!