13
துறவியுள்ளம்
திருவள்ளுவர் திடீரென்று துறவியாகிவிடுகிறார். இந்த உலகப் பற்றையெல்லாம் விட்டொழித்து, இறைவனைப் பற்றவேண்டுமென்று சொல்லுகிறார்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்பது ஒரு குறள். இந்தக் குறளைச் சற்றுக் கூர்ந்து கவனிக்கவேண்டும். இது ‘இவ்வுலகப்பற்று விடுவதற்கு இறைவன் திருவடியைப் பற்று' என்று பொருள்படும் எனச் சொல்வார்கள். ஆனால் எனக்கு இதில் ஒரு ஐயம்! இதை, பல புலவர்களிடம் கேட்டேன். ஆனால் இன்னும் அவர்கள் முடிவாகச் சொல்லவில்லை. ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு குழுமியிருக்கும் உங்களிற் சிலர் இந்த ஐயப்பாட்டை விளக்க முடியுமானால் மனம் உவந்து வரவேற்பேன். இல்லையாயினும், இதைப்பற்றிச் சிந்தியுங்கள். திருவள்ளுவர் சொன்னதைத் திரும்பச் சொல்லியதில்லை. பொருத்தமில்லாமலும் சொல்லியதில்லை. ஆனால் இங்கு, 'அப்பற்றைப் பற்றுக’ என்று பெய்திருப்பது, சொன்னதைத் திரும்பச் சொல்வதுபோல் தோன்றுகிறது. "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்று சொல்லிவிட்டு, ஏன் மீண்டும் ‘அப் பற்றைப் பற்றுக’ என்று சொல்ல வேண்டும்.
"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
என்பது ஒரு குறள். இதில் இரண்டு யார்கள் இருக்கின்றன. இந்தக் குறளைப் படிக்கும்போது யார், யார் வாய்க் கேட்பினும் என்று பிரித்து சொல்பவன் எவனாயிருந்தாலும், கேட்பவன் எவனாயிருந்தாலும், பேசப்படும்