பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வில்லை; அதற்கு முன்பும் பல தடவை வந்து அவனை வருத்தியிருக்கிறது என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

"நாள்தோறும் வந்து என்னைத் துன்புறுத்தும் வறுமைத் துன்பம் நேற்றும் வந்தது. அது இன்றும் வரும் போலிருக்கிறது. வந்தால் நான் என்ன செய்வேன்?" என்று வறுமைத் துன்பத்தில் உழன்ற ஒருவன் அஞ்சி நடுங்கும் காட்சியை இக்குறள் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைக் காணும்பொழுது நமது உள்ளமும் நடுங்குகிறது.

"வருவது" என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து, நாள்தோறும் வருவது நேற்றும் வந்தது; இன்றும் வரும் போலிருக்கிறது என்ற பொருளை மட்டும் அது காட்டிக் கொண்டில்லை. "வந்த அது நாள்தோறும் போய்க்கொண்டிருக்கிறது" என்ற பொருளையும் காட்டிக்கொண்டிருக்கிறது.

“வந்து நிலைத்து நின்றுவிடும் வறுமையைவிட, அடிக்கடி வந்துபோகும் வறுமை அதிகத் துன்பத்தை விளைவிக்கும்” என்பது இக் குறளில் புதைந்து கிடக்கும் பொருள்.

வறுமையாளர் இரு வகை. எப்போதுமே இல்லாதவர்-இடையிலே இல்லாமற் போனவர் என்று. இடையிலே இல்லாமற் போனவர் அடையுந் துன்பமும் இருவகை. வருவார்க்கு வழங்கப் பொருளில்லாமை, வந்த பசிக்கு உணவில்லாமை என்று. இதனை ஈயமுடியாமை துய்க்க முடியாமை என்பர். இவ்விரண்டுங்கூட நிலைத்து நில்லாமல் அடிக்கடி வந்து போய் விளைக்கும் கொடுமையையே இக்குறள் "கொன்றது போலும் நிரப்பு" என்று கூறிக் கொண்டிருக்கிறது.