பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


'நேற்று வந்து கொன்ற புலி இன்றும் வந்து கொல்லுமோ', 'நேற்று வந்து அழித்த வெள்ளம் இன்றும் வந்து அழிக்குமோ' என்று ஒருவன் அஞ்சி ஏங்குவதிலும் அதிகமானது என்பதை, "இன்றும் வருவது கொல்லோ!" என்ற சொற்கள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

உழுது, உழைத்துண்டு வாழ முடியாதவனை, வறுமை கைப்பற்றி இரந்துண்ணும்படி செய்துவிடும். அது உப்புக்கும் கஞ்சிக்கும் கூற்றாக இருக்குமே தவிர, வாழ்வாக இராது. அஞ்சி, நடுங்கி, இரந்துண்டு வாழும் இந்நிலையை எண்ணும்பொழுது அதைவிட மடிவது நல்லது எனத் தோன்றும் - என்பன இவ்வதிகாரத்தின் திரண்ட கருத்துக்கள். இவை வறுமை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவன.

குறளைப் படியுங்கள் மறுமுறையும் :

"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு!"

எப்படி இக்குறள்?
எப்படி, வள்ளுவரது உள்ளம்!