பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நோய் உள்ளம்


"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்"

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது இன்னா செய்யாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று.

வெகுளாமையைப் பற்றிக் கூறிய பின்னும், கொல்லாமையைப் பற்றிக் கூறுமுன்னும், "இன்னா செய்யாமை" என்பதுபற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.

"நோய் எல்லாம் நோய் செய்தவர் மேல் ஆகும். ஆதவின், நோயின்மை வேண்டுபவர் பிறருக்கு நோய் செய்யார்" என்பது இதன் பொருள்.

திருக்குறளுக்கு உள்ள தனிச்சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்று மேற்போக்காகப் படிப்போர் அறியமுடியாத பல உயர்ந்த கருத்துக்களைச் சிந்திப்போருக்கு அது வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதே.

இக் குறளில் ஆழ்ந்துள்ள பொருள்களைக் காணு முன்னே, "நோய்" என்ற சொல்லுக்குப் பொருள் கண்டாக வேண்டும்.

திருக்குறளில் நோய் என்ற சொல் 34 இடங்களில் காணப்படுகிறது. ஆறுவகையான பொருள்களில் வள்ளுவர் இதனைக் கையாண்டிருக்கிறார்.