இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் பீடம் : குருகுலம்,
குருகுலம் அழகரடிகள் : 21-6-64.
மதிப்புரை
திருவாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், பேச்சாலும் எழுத்தாலும் இனிய சொல்லோவியர்; தொடுதமிழ் நூலெல்லாம் அவர்க்குச் சுரந்தமிழ்து பாயும்.
திருக்குறள், தமிழ்மறை; அதோடு, உலகுக் கெல்லாம் பொதுமறை! இயல்பாகவே அது, சுரந்த பா; தாய் நாடிய தமிழ்க்கன்று கி. ஆ. பெ. வாய் வைத்தால், கருத்தமிழ்து பெருக்கெடுக்கக் கேட்பானேன்!
இங்ஙனமொரு நிகழ்ச்சி, பொன்மலைத் திருக்குறள் கழகத்தில், சில ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தது. மேன்மேலும் பெருகியொழுகிய அமிழ்தப் பொழிவை 'வள்ளுவர் உள்ளம்’ என்னும் இப் பொன்வள்ளம் ஏந்திப் பலர்க்கும் வழங்குகின்றது.