பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒம்புவான்", "செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்" என்னும் குறட்பகுதிகளாலும் இதனைக் குறிப்பாய் உணரலாம். மேலும், இக்குறளிலேயே ஒக்கல் (சுற்றம்) என ஒன்று தனியாகக் கூறியுள்ளமையே, உறவினர் விருந்தினர் ஆகார் என்பதற்கு மறுக்கமுடியாத அகச்சான்றாகும். சரி நல்லது, புதிதாக வருபவரே விருந்தினர் என்பீராயின், அவர்களை முன்குறளில் உள்ள துறந்தார், துவவாதவர் என்பவர்க்குள் அடக்கிவிடக்கூடாதோ? என்று வினவலாம். அடக்கமுடியாது. ஏன்? ஓர் ஊரில் விழா நடக்கின்றது, மாநாடு நடக்கின்றது. இன்னபிற சிறப்புக்கள் நடைபெறுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அவ்வுர்க்குப் புதிய மக்கள், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வருவார்கள். அப்புதியோர்க்கு, ஊரினர் தங்க இடம் அளிக்கலாம்; குளிக்கவும், குடிக்கவும் தண்ணிர் வசதி செய்து தரலாம்; இயலுமேல், வந்தவர்க்கும் உடன்பாடாகில் உணவும் அளிக்கலாம். செய்யப்பட வேண்டியதொன்றுதானே இஃது இன்றும் நாட்டில் நடைபெறுகின்றதே இத்தகைய நிகழ்ச்சி! அன்றியும், புதிதாக வந்த இடத்தில் குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் என்ன செய்யமுடியும்? ஊரார் உதவி இருந்தே தீரவேண்டும். இத்தகைய புதியோரைத் துறந்தார் என்று சொல்ல முடியுமா? அல்லது, துவ்வாதவர் என்றுதான் மொழிய முடியுமா? முடியவே முடியாதே உண்மையான விருந்தினர் என்பவர் இப்புதியோரே! இன்னும் சிலர் (பிரயாணம்) வழிநடந்து செல்கிறார்கள். அவர்கள், வெய்யில் கடுமையாகக் காயும் நேரத்திலோ, இரவிலோ, மழை பெய்யும் நேரத்திலோ வழியில் உள்ள ஓர் ஊரில் தங்கிவிடுவார்கள். அவர்களும் அவ்வுரார்க்கு விருந்தினரேயாவர். ஏன் - இப்புதியோர், ஊராரின் உதவியின்றித் தம் கைப்பணத்தைக் கொண்டு, தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ள முடியாதா என்று சிலர் ஐயுறலாம். இங்கொரு செய்தியை நினைவுபடுத்தினால் இவ்வையத்திற்கு ஒருவாறு இடமிருக்காது. அஃதென்ன? வள்ளுவர் கண்ட மனையறம் 11