பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட மனையறம் தோற்றுவாய் திருவள்ளுவரும் திருக்குறளும் திருவள்ளுவரால் இயற்றப்பெற்ற திருக்குறள் தமிழ்நூல் மட்டுமன்று தமிழர் நூல் மட்டுமன்று உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளதோர் உலக நூலாகும். இந்நூல், வடமொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி, இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்த்தெழுதப் பெற்றுள்ளது. இதனால், இதனை "உலகமறை" என்றும் "பொதுமறை" என்றும் புகழ்ந்து கூறுவதுண்டு. பாரதியாரும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு" என்று பாராட்டிப் போந்தார். இத்தகைய திருக்குறளின் மாண்பினைப் பெரும்பாலான தமிழர்கள் இன்னும் அறிந்திலர், கற்றிலர். இவர்கள் எங்கே இதனை உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்பப் போகின்றார்கள்? இவ்வாறு தமிழர்கள் தன்னை மறந்தாலும், திருக்குறள் தமிழர்களை மறந்திலது. தனது கருத்து வன்மையால் உலக மக்களைக் கவர்ந்து, அவர்தம் மொழிகளிற் பெயர்க்கப்பெற்றுத் தமிழையும் தமிழ் மக்களையும் உலகிற்கு அறிமுகஞ் செய்து வைத்திருக்கிறது இந்நூல். இவ்வரும்பெருஞ் செல்வத்தை அருளிப்போந்த திருவள்ளுவனார்க்கு உலகம் யாது கைம்மாறு செய்யவல்லதோ! வள்ளுவர் கண்ட மனையறம் 1