பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தன்னுயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஒம்பும் மன்னுயிர் முதல்வன்' என்பன மணிமேகலை (11:48;25:161-7) ஆக, அறிவு, தனக்கென வாழும் வாழ்க்கைக்குத் துணை போகாது; பிறர்க்கென வாழும் வாழ்க்கைக்குத் துணை போதல் வேண்டும்; பிறர்க்குவரும் இன்ப துன்பங்களைத் தனக்கு வந்தனவாகக்கொள்ள அறிவு துணைசெய்ய வேண்டும்; அவ்வாறு கொள்ளத் துணைபோகாத அறிவால் பயன் இல்லை. அறிவின் இவ்விலக்கணத்தை விளக்கவந்த இடத்தில்தான், வள்ளுவர் அத்தகு அறிவால் ஆவது ஏதும் இல்லை எனக்கிடந்தாங்கு உரைத்தால், பொருள் அழுத்தம் இராது என்பதால், அத்தகு அறிவால் ஆகக்கூடிய பயன் ஏதேனும் உளதா? என வினா எழுப்பிச் சென்றுள்ளார். 'அறிவினான் ஆகுவது உண்டோ: பிறிதின்நோய் தன்நோய் போல் போற்றாக்கடை" (குறள் : 315) —O—