பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

பிடித்ததாக அடிகளே குறிப்பிடுகிறார். ‘திருக்குறளைப்பற்றிக் காந்தியண்ணல் அறிவாரோ? குறளில் அவர் படிந்ததுண்டோ ? தமிழ் கற்றபின் அல்லவோ குறள் பயில முடியும்?’ என்றெல்லாம் ஐயம் கிளப்புவோர், அடிகளின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘உண்மையின் ஆய்வை’ப் (My Experiments with Truth) படித்து உணர்ந்து கொள்ளட்டும்.

காந்தியண்ணல் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த போது, அவருடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் தமிழரே. ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் தோட்டக் கூலிகளாகவும், சுரங்கக் கூலிகளாகவும் பணி புரிந்தோரில் பெரும்பான்மையினர் தமிழரே. அடிகள் தம் நூலில் பல இடங்களில் பாராட்டிக் குறிப்பிடும் தம்பி நாயுடு, ஜேக் முதலியார், பாலசுந்தரம் ஆகியோர் தமிழரே. தென்னாப்பிரிக்க உரிமைப் போரில் இன்னுயிர் நல்கி, அண்ணலின் அருளுள்ளத்தில் நீங்காத இடம் பெற்ற வள்ளியம்மை தமிழ்ப் பெண்ணே, அடிகள் இந்திய நாடு திரும்பிச் சபர்மதி ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்தபோது, அதில் இடம் பெற்றோர் தமிழரே. தமிழர், அடிகள் வாழ்வில் உயிராய் உணர்வாய் ஒன்றி விட்டனர். அண்ணலே இக் கருத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

‘தென்னாப்பிரிக்க உரிமைப் போரில் தமிழ் மக்கள் புரிந்த துணையைப் போல வேறெவ் விந்தியரும் புரியவில்லை. அவர்கட்கு நன்றி செலுத்த