பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

துக்கு அருகில், தெரு மூலைகளில் நின்று கொண்டு கிருத்தவப் பாதிரிமார்கள் செய்த சொற்பொழிவுகள் தாம். இந்து சமயத்தையும், அச்சமயக் கடவுளர்களையும் அப்பாதிரிமார்கள் இகழ்ந்து பேசியதைக் காந்தியடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதே காலத்தில் ஓர் இந்து நண்பர் கிருத்தவ சமயத்தைத் தழுவியது பற்றிக் காந்தியடிகள் கேள்விப்பட்டார். அந்த நண்பர் கிருத்தவரானவுடனே மாட்டிறைச்சி தின்னவும், சாராயம் குடிக்கவும், மேலை நாட்டினரைப்போல் உடைகளணியவும் தொடங்கி விட்டாராம்; அதோடு இந்து சமயத்தையும் இந்திய நாட்டையும் இகழ்ந்து பேசத் தலைப்பட்டாராம். இவற்றை யெல்லாம் அறிந்ததும், ‘கிருத்தவ சமயமும் ஒரு சமயமா? இதற்குச் சமயம் என்ற பெயரே தகாது’ என்று எண்ணினாராம். ஆனால் பிற்காலத்தில் மேற்படி காரியங்கட்கெல்லாம் கிருத்தவ சமயம் பொறுப்பில்லை என்றும், கிருத்தவ சமயச் சொற்பொழிவாளர்களே காரணம் என்றும் காந்தியடிகள் அறிந்து கொண்டார். கிருத்தவ சமயம் அடிகளின் வாழ்வில் எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தது என்பதைப் பற்றிப் பின்னர் அறிவோம்.

காந்தியடிகள் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த இரு ஆங்கில நண்பர்கள், அவருக்கு அறிமுகமானார்கள். அப்போது பகவத் கீதையைப்பற்றிய பேச்செழுந்தது. ‘நீர் பகவத்கீதை படித்திருக்கிறீரா?’ என்று அந்த நண்பர்கள் கேட்டார்கள்.