பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

யாது. இச்சமயத்திலும் பல குறைகள் என் கண் முன்னே நன்றாகப் புலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை இந்து சமயத்தின் ஒரு பகுதியானால், அது அழுகிப்போன பகுதியாகவே இருக்க வேண்டும். பற்பல சாதிகள், கோட்பாடுகள் முதலிய பிரிவுகளின் நீதியும் எனக்குப் புலனாகவில்ல. மறைகள் யாவும் இறைவனால் வெளியிடப்பட்டவையெனில், விவிலிய நூலும், குர்ஆனும் ஏன் அத்தகையனவாக இருக்கக்கூடாது?”

அடிகள் வாழ்வின் முற்பகுதியில், அவருள்ளத்தில் சமயத்தைப்பற்றி எழுந்த எண்ண அலைகளைக் கண்டோம். இவற்றால் நாம் அறிவது யாதெனில் எல்லாச் சமயங்களிலும் படிந்துள்ள உயர்ந்த கொள்கைகளே அடிகளின் உயர்ந்த சமயமாக இருக்க முடியும் என்பதாகும். அதன் விரிவைப் பின்னர்க் காண்போம்.

அடிகளைப் பார்த்து, ‘நீர் எச்சமயத்தைச் சார்ந்தவர்?’ என்று கேட்டால், ‘நான் வைணவன்’ என்று தயங்காமல் கூறுவார். அவரை அறியாதார்க்கு, அடிகளின் விடை வியப்பை ஊட்டலாம். ஏனெனில் காந்தியடிகள் திருமால் கோவிலுக்கும் செல்லுவதில்லை; வீட்டிலேயும் இறைவனின் திருவுருவத்தை வைத்து வழிபாடு நிகழ்த்துவதில்லை. வைணவனுக்குரிய துளசிமணி மாலையை அவர் கழுத்தில் காணமுடியாது. அடிகளின் வைணவம் உயர்வு தாழ்வற்றது; தீண்டாமையைத் தீதென வெறுப்பது; வடகலை தென்கலைச் சண்டைகளுக்கு