பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


அந்நோய் தொற்றிக் கொண்டால் என்ன செய்வது என்று வீட்டிலுள்ளவர்கள் அஞ்சினர். எனவே, அவன் உடல் சிறிது குணமடைந்ததும், தோட்டக் கூலிகளுக்கான மருத்துவ மனையில் அவனைச் சேர்த்தார்.

இதேபோன்ற நிகழ்ச்சி அடிகள் இந்தியா வந்த பிறகும் ஏற்பட்டது. இந் நிகழ்ச்சி 1939 ஆம் ஆண்டு ஏற்பட்டது. கதிரவன் மேற்றிசையில் மறைந்து விட்டான். வழக்கம் போல் உலாவுவதற்காக அடிகள் 'சேவாக் கிராம'த்தை விட்டு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். கையில் ஒரு துணி மூட்டையுடன் ஒருவர் ஆசிரம வாயிலில் நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு தொழு நோயாளர்.

'பாபு! நான் தங்களுடைய ஒப்புதலைப் பெற்றே இங்கு வந்திருக்கவேண்டும். நீங்களும் கடிதம் எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள், ஆனால், என் உள்ளம் அதுவரை பொறுத்திருக்கவில்லை. அரித் துவாரத்திலிருந்து புறப்பட்டு நேராக இங்கு வந் திருக்கிறேன். அரித்துவாரத்தில் என் கையினால் நூற்ற கதர் நூல் இம்மூட்டையில் உள்ளது. உங்களை நேரில் கண்டு நானே கொடுக்கவேண்டுமென்பதற்காக, இதைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்று கூறினார் அந்நோயாளி.

அந்நோயாளியின் பெயர் பார்ச்சூர் சாஸ்திரி. 1922 ஆம் ஆண்டு காந்தியடிகளோடு எரவாடா சிறையில் இருந்தவர். சிறையை விட்டு வெளி வந்த-