பக்கம்:வழிகாட்டி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வழிகாட்டி

வழிபட முருகன் அவர்களுக்கு அருள் செய்கிறான்; வேண்டியவர்கள் வேண்டியவற்றைப் பெறும்படி வழங்குகிறான். அவற்றைப் பெற்றவர்கள் அந்த உவகை யினாலும் நன்றியறிவினாலும் மேலும் மேலும் வழி பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வழி பாட்டை ஏற்றுக்கொண்டும், வேண்டியதை அருள் செய்துகொண்டும் அங்கங்கே முருகன் எழுந்தருளியிருக் கிறான். இதை யாரோ சொல்லக் கேட்டேனென்று எண்ணாதே. நானே இதை உணர்ந்திருக்கிறேன். நான் அறிந்தவாறு இது.

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே.

(தமக்கு விருப்பமானவற்றை வேண்டும் அடிய வர்கள் வேண்டியபடியே அடைந்து வழிபட்டுக் கொண் டிருக்க முருகன் அங்கங்கே தங்கியிருத்தலும் நான் அறிந்ததேயாகும்.)

அறிவுறுத்தல்

முருகனுடைய பெருமையையும் அவன் இருக்கும் இடங்களையும் தெரிவித்த நக்கீரர் இதுவரையில் தம்மை மறந்திருந்தார்; எதிர் நிற்கும் புலவனையும் மறந்திருந்தார். படைவீடுகளிலும் காவிலும் காட்டிலும் துருத்தியிலும் வேலன் புனைந்த களத்திலும் குறமகள் முருகனை ஆற்றுப்படுத்தும் கோயிலிலும் அவர் உள்ளம் சென்று சென்று முருகன் அங்கங்கெல்லாம் அழகனாகவும் வீரனாகவும் தெய்வமாகவும் எழுந்தருளி யிருப்பதை அனுபவிக்கிறார். அப்போது உணர்ச்சி விஞ்சுகிறது. அந்த உணர்ச்சி பேசுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/144&oldid=643810" இலிருந்து மீள்விக்கப்பட்டது