பக்கம்:வழிகாட்டி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 183

அருவி பல விலை உயர்ந்த பண்டங்களை வாரிக் கொண்டு வருகிறது. பல காலம் வாழ்ந்த பெரிய ஆண் யானைகள் மலையில் இறந்துபட்டிருக்கும். அவற்றின் தந்தங்கள் முற்றி விளைந்து முத்துடையனவாக இருக்கும். அங்கங்கே கிடக்கும் அந்தத் தந்தங்களை அடித்துக் கொண்டு வருகிறது அருவி. அவை மட்டுமா? மலையின் மேல் மணிகள் உண்டாகின்றன; பொன்னும் கொடியோடிக் கிடக்கும். அருவி வேகமாகத் தத்திக் குதித்துப் போகும் போக்கிலே அந்த நல்ல பொன்னும் மணியும் மேலே வந்து தம் நிறம் விளங்கும்படியாகப் பளிச்சிடுகின்றன. இப்படி அலைத்து வருவதனால் அருவியிலே பொன்னின் பொடி கலக்கிறது; அதனைக் கொழித்து ஒடுகின்றது அவ்வருவி.

பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழிஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப் பொன் கொழியா. (பெரிய களிற்றினது முத்தையுடைய வெள்ளிய தந்தங்களை வாரிக்கொண்டு, குதித்து, நல்ல பொன்னும் மணியும் தம் நிறம் வெளிப்படத் தோன்றுமாறு செய்து பொன்னைக் கொழித்து.)

அருவி கீழே வருகிறது. பூமியில் இறங்குவதற்கு முன் அங்கே உள்ள வாழைகளின் அடிமரங்களையெல் லாம் முறித்துவிடுகிறது. தென்னமரங்களில் உள்ள கனமான இளநீர்க் குலைகளெல்லாம் உதிரும்படியாகத் தாக்குகிறது. அங்கே படர்ந்து வளரும் மிளகுக் கொடியின் காய்க்கொத்தைக் கீழே சாய்க்கிறது.

வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/185&oldid=643910" இலிருந்து மீள்விக்கப்பட்டது