பக்கம்:வழிப்போக்கன்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வார்டர்கள் அவர்களை மாடுகளை அடிப்பதுபோல் அடித்தார்கள். நொறுக்கினார்கள், நையப் புடைத்தார்கள்!

“சிறையையா உடைத்துக்கொண்டு ஓடப் போகிறார்கள்? உங்கள் மண்டையை உடைக்கிறோம், பாருங்கள்” என்று ஒவ்வொரு கைதியின் மண்டையிலும் ஓங்கி அடித்தார்கள்.

இந்த பயங்கரம் அரைமணி நேரம் நீடித்தது. மீண்டும் விசில் சத்தம். அத்துடன் ‘லத்தி சார்ஜ்’ நிறுத்தப்பட்டது. குண்டாந்தடியின் அடிக்குத் தப்பாத கைதிகளே இல்லை.

சுந்தரம் மூர்ச்சித்துக் கீழே விழுந்து கிடந்தான். வலக்கையிலும் மண்டையிலும் பலமாக அடிபட்டு இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.

இந்தக் கோரத் தாண்டவத்தின் விளைவாக சிறை முழுவதுமே இரத்தக் காடாக மாறிவிட்டது.

கை, கால், கண், காது, மூக்கு போன்ற அவயங்களை இழந்து முனகிக் கொண்டிருந்த கைதிகளை ஸ்ட்ரெச்சரில் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.

ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த சுந்தரத்துக்கு சுய நினைவு வந்தபோது தன்னுடைய மண்டையிலும் வலது கையிலும் பலமாகக் கட்டுப் போடபட்டிருப்பதைக் கண்டான். கையைத் துக்க முடியவில்லை. மண்டையில் தையல் போடப்பட்டிருந்தது. கையிலும் மண்டையிலும் வலி தாங்கவில்லை அவனுக்கு.

‘பிழைப்பேனா நான்? . காமு! உன்னைக் கண்ணால் காண்பேனா?’ என்று அவன் வாய் முணுமுணுத்தது. துக்கத்தைக் கண்ணீராக வடித்துக் கொண்டிருந்தன அவன் கண்கள்.

வலது பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்தார் எம்.ஏ., பி. எல். அவருக்கும் காலில் பலத்த அடி!

“உங்களுக்கு பலத்த அடியோ?” என்று கேட்டான் சுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/96&oldid=1322834" இலிருந்து மீள்விக்கப்பட்டது