பக்கம்:வாடா மல்லி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சு. சமுத்திரம்


தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் அந்தப் பதவியைச் சுயம்புவுக்கு ஆதரவாகப் பயன்படுத்திப் பார்த்தான். ஹெச்சோடியை - அதாவது பொறியியல் துறையின் மின்னணுப் பிரிவுத் தலைவரான - ஹெட் ஆப் த டிபார்ட்மெண்டைப் பார்த்தான் அவர் கைகளை மேலே தூக்கிக் காட்டினார். எதுவும் பேசாமல் அவர் அப்படிச் செய்தது, விஷயம் தலைக்குமேல் போய்விட்டது என்று அர்த்தப்படுத்துவதா, இல்லை, சுயம்புவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா என்று புரியாமல் விழித்த மூர்த்தி, பிறகு இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் பதிவாளரைப் பார்த்தான். அவரும் “இது தனிப்பட்ட விவகாரம்” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டார். அப்போது கூட்டுச் செயலாளர் பதவிக்குப் போட்டி போட்டு நான்கு வாக்குகளில் தோல்வியுற்ற ராமலிங்கம் ஒரு யோசனை சொன்னான். சீனியர்கள், தன்னை ரேக்கிங் செய்து செய்தே தனது மன நிலை பாதிக்கப்பட்டதாய், சுயம்புவே துணைவேந்தருக்கு ஒரு மனுக் கொடுக்க வேண்டும் என்றான். இந்த மனுவையும் மீறி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்றான். அவனே ஒரு மனுவை எழுதிக் கொடுத்தபோது சுயம்பு அதில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டான். “உண்மையை மறைச்சு நான் படுற பாடு போதும். பொய் வேற பேசனுமா” என்று சொன்னது மட்டுமல்லாமல் அந்த மனுக் காகிதத்தைக் கிழித்துப் போட்டான். அவன் தங்களையே அப்படிக் கிழித்துப் போட்டுவிட்டதாக பல முதலாண்டு மாணவர்கள் நினைத்து ஒதுங்கிக்கொண்டார்கள். இப்போது அவன் இருவர் தவிர்த்து எல்லோராலும் கைவிடப்பட்டவனாகி விட்டான்.

சுவரில் சாய்ந்து சுரணை கெட்டு உடம்பில் ஒரு சிறு அசைவுகூட இல்லாமல் இருந்தவனை ஒருவர் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/118&oldid=1249259" இலிருந்து மீள்விக்கப்பட்டது