பக்கம்:வாடா மல்லி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 123


கிடந்து, முனங்கினாள். அவள் தள்ளிய தள்ளலில் சுவரில் போய்க் குப்புற விழுந்த மரகதம், தட்டுத் தடுமாறி நின்றாள். நெற்றியைப் பிடித்தபடியே கீழே துடித்த அம்மாவைக் கைத்தாங்கலாய்த் தூக்கி உட்கார வைத்தாள். அம்மாவோ, பழையபடி சரிந்தாள். மரகதம், தம்பியை நோக்கி நகர்ந்தாள். அவன் கத்தினான்.

“யாராவது கிட்ட வந்தீங்க. நான் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்! நான் ஆம்புள இல்ல! இத மொதல்ல தெரிஞ்சுக்குங்க!”

வெள்ளையம்மா, கண்களைக் கசக்கிக்கொண்டு, வலித்த இடத்தைத் தடவி விட்டுக் கொண்டிருந்தபோது, மரகதம் அவனை மீண்டும் பார்த்தாள். கிட்டே நெருங்க முடியாத பார்வை: எட்டி உதைக்கப் போவது போன்ற கால்கள் : சுயம்பு பல்லைக் கடித்துக்கொண்டு, யார் பக்கத்தில் வந்தாலும், இரண்டில் ஒன்றைப் பார்க்கப் போவது போல் ஆயத்த நிலையில் நின்றான்.

மரகதம் எந்தச் சுவரில் மோதினாளோ, அந்தச் சுவரிலேயே தலையைப் போட்டு அங்குமிங்குமாய்ப் புரட்டினாள். “தம்பி, என் தம்பியே..கடவுளே... அவன இப்படி ஆக்கிட்டியே, ஆக்கிட்டியே” என்று அரற்றியவள், திடீரென்று தலையைச் சுவரில் வைத்து மோதினாள். மோதிக்கொண்டே இருந்தாள்.

சுயம்பு, அக்காவின் தலையைத் தொட்டான். உடனே அவள், அவனை லேசாய் தள்ளிவிட்டுக்கொண்டு, தலையைச் சுவரில் வைத்துத் தேய்த்துக்கொண்டே இருந்தாள். சுயம்பு அக்காவைப் பலமாகத் திருப்பி விட்டான். அவள் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பது போல், அவள் பக்கமாகக் கைகளை நீட்டினான். அவள் கையை எடுத்து இடுப்புச் சேலையின் பக்கம் கொண்டு வந்தான். வீறாப்பு இல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/145&oldid=1249289" இலிருந்து மீள்விக்கப்பட்டது