பக்கம்:வாடா மல்லி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 133


பாதாளக் குகைக்குள்ள பிடிச்சுப் போடணுமா..சரி, சரி, கேட்கிறத கேட்டு, வாங்குறத வாங்கிக்கிட்டு பேசாம போ! ஒனக்கு என்ன வேணும் சொல்லுடி! நீ பேயாப் போனாலும், நீயும் என் மகள்தாண்டி. ஒன் தாய்கிட்ட கேள் மகளே.”

சுயம்புவுக்குத் துக்கம் குறைந்து, மகிழ்ச்சி ஏற்பட்டது. முதல் தடவையாக தன்னை ‘டி’ போட்டும், மகள் என்றும் அழைத்த அத்தையைப் பார்த்து, லேசாய்ச் சிரித்தான். வெள்ளையம்மா அதட்டினாள்.

“இப்படி சிரிச்சா சீரழிஞ்சு போவே மகளே! சீக்கிரமா கேட்டுட்டு சீக்கிரமா போ.உனக்கு என்ன வேணும்டி..”

சுயம்பு சுயமாகவே பதிலளித்தாள்.

“சேல வேணும். சேல வேணும். டேவிட் போட்ட வெளிர் மஞ்சள் துண்டுமாதிரி நிறத்துல சேல இருக்கணும். ஜாக்கெட். வெள்ளை உள்பாடி, பாவாடை. ஏழெட்டு வளையலு, குங்குமம்.”

“சரி. இப்பவே ஒடிப்போ. நீ கேட்டது எல்லாம் அடுத்த செவ்வாக்கிழமை உச்சி காலத்துல ஒன் வீடு தேடி வரும்.”

பூவம்மா, செம்புத்தண்ணி, செம்புத்தண்ணி என்று கத்த அந்த கத்தல் முடியுமுன்பே, மரகதம் செம்பும் கையு மாக வந்தாள். அதை வாங்கிக்கொண்ட பூவம்மா சுயம்புவின் முகத்தில் செம்பையும் சேர்த்து மூன்று தடவை வீசியடித்தாள். அவ்வளவு உக்ரம். பிறகு நெற்றியில் திருநீறு இட்டு, குங்குமம் போட்டு, வாயைத் திறக்கச் சொல்லி, அதில் மூன்று தடவை கையை உள்ளே விட்டு, வெளியே எடுத்தாள். ஒரு பெரிய பிரச்னையைத் தீர்த்து விட்ட பெரு மிதத்தில் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/155&oldid=1249611" இலிருந்து மீள்விக்கப்பட்டது