பக்கம்:வாடா மல்லி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சு. சமுத்திரம்


உறவு கிடைக்காமல் போயிருக்குமோ என்ற கேள்வி. முதலிரவில்கூட, இந்த ஆறுமுகப்பாண்டி சினிமாக் கதாநாயகன்போல் தன்னைக் கைகளில் ஏந்திக் கொள்ளாமல், துண்டைக் கடித்துக்கொண்டு நின்றது கூட, ஒரளவு பொட்டைச் செயலோ என்ற விரசமான சிந்தனை. ஒருதடவை, சைக்கிளில் பின்னால் இருந்த தான், முன்னால் உட்காரச் சிணுங்கியபோது, அவன் ரோடு மறைக்கும் என்று சொன்னது இப்போது, மனதை மறைத்தது. சிற்சில சிக்கலான சமயங்களில்-குறிப்பாக, மருமகள்-மாமியார் மகாப்போரின்போது எல்லாக் கணவன்மாரும் செய்வது போல், இவன், தன்னை அடிப்பது கிடக்கட்டும், அடிப்பதற்குக்கூட @ ஓங்காதது கூட, ஒரு ஆண்மையற்றதனமோ என்ற எண்ணம். ஆக மொத்தத்தில் அவள் பிரச்னை பரீட்சித்துப் பார்த்துக் கண்டறிய முடியாத விவகாரம். தம்பிக்கு வந்தது அவனைப் போலவே முகஜாடை கொண்ட அண்ணனிடமும் ஒரளவு இருக்கும் என்ற மனோவிகாரம். இன்றைய சண்டையில்கூட அவன் முத்துக்குமாரிடம் கெஞ்சினானே தவிர, ஒரு மாவீரன் போல் மார்தட்டவில்லையே என்ற குறை. முறைப் பெண்கள் கிண்டல் செய்யும்போது கூட, தக்க பதிலடி கொடுக்கத் தெரியாமல், அந்தப் பெண்களோடு பெண்களாய்ச் சிரித்தவன்...அப்போது ஏகப்பட்ட பொறாமை...இப்போது ஆற்றாமையாய் வெளிப்பட்டது. கூடவே, ஊரில் தன்னை கண்களால் வளைய வளையப் பிடித்த பலசரக்குக் கடைக்கார பாண்டியனைக் கட்டியிருக்கலாமோ என்ற மறு பரிசீலனை.

வழக்கத்திற்கு விரோதமாய்ப் பேச்சு கொடுக்காமல் இருக்கும் மனைவியின் மனநிலை புரியாமல், ஆறுமுகப் பாண்டி தன்பாட்டுக்குப் பேசினான். அவளைத் தன் பக்கம் இழுக்காமல், மறுபக்கமாய் படுத்திருப்பதையும் மாற்றிக் கொள்ளாமல் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/180&oldid=1249649" இலிருந்து மீள்விக்கப்பட்டது