பக்கம்:வாடா மல்லி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

அந்தக் கட்டிடம், மருத்துவமனையா, அல்லது லாட்ஜா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

வெளியே, வளைவு வளைவாயும் அழகழகாயும் தோன்றும் அந்த இரண்டு மாடிக் கட்டிடத்திற்குள், டாக்டர்களின் நடமாட்டத்தையே காணவில்லை. ஆங்காங்கே சில பையன்கள் டிபன் செட்டுகளைப் பொட்டலம் பொட்டலமாகவும் தட்டுத் தட்டாகவும் எடுத்துக்கொண்டு போனார்கள். இதை வைத்து அந்தக் கட்டிடத்தை லாட்ஜ் என்று சொன்னால் தப்பில்லை. அதே சமயம் வெளியே இன்னொரு பக்கத்தில் ஒரு மருந்துக் கடையும் உள்ளே ஒரு இடத்தில் தலையில் வெள்ளைக் கைக்குட்டைகளைக் கட்டிய பெண்களையும் பார்த்தால், அதை, மருத்துவமனை என்றும் முனங்கிக்கொண்டே சொல்லலாம்.

அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆறாவது எண் அறையில் சுயம்பு தன்னந்தனியாய்க் கிடந்தான். ஸ்பிரிங் கட்டில், அவன் சுகப்படாமல் போனதால் கிடைத்த சுகமான கட்டில். சின்னதே அழகு என்பது போல் சின்ன அறை. மொசைக் தரை. வால் பேப்பர் சுவர்கள். அவன் கட்டிலுக்குப் பின்னால், கிளிப் பிடித்த பேடில் ஏழெட்டுக் காகிதக் குவியல்கள். ஈஜிலி கோடுகள். ரத்தச் சித்திரிப்புகளைக் காட்டும் ஒரு தாள். சிறுநீர் இயல்புகளைச் சொல்லும் ஒரு சதுரக் காகிதம். நுரையீரலைக் காட்டும் எக்ஸ்ரே படம். தலையைப் படம் பிடித்த இன்னொரு படம். ரத்த அழுத்தம், எல்லாமே நெகடிவ். அதாவது அவன் உடல்நிலையைக் காட்டும் சுபசகுன அறிகுறிகள். கிட்னியும் சரி என்றால், அவன் வீட்டுக்குப் போகலாம். எந்த நோயும் கிடையாதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/184&oldid=630258" இலிருந்து மீள்விக்கப்பட்டது