பக்கம்:வாடா மல்லி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 169


அவற்றிற்கு போட்டியாக மாவிலைத் தோரணங்கள். முன்பக்கம் குலை வாழைகள். பூணுால் போட்ட பெரிய செம்பு. அதன்மேல் மஞ்சள் தடவிய தேங்காய், அருகே நாழி, நெல், பக்கா. அதன் மேல் ஒரு விளக்கு. அதன் முன்னால் மேளச் செட்டு.பீப்பிச் சத்தம்.

செட்டு மேளம் கொட்டியது. கூட்டம் முண்டி யடித்தது. பந்தியில் ஒரு வரிசை. அதைப் பார்த்துக்கொண்டு மறு வரிசை. சுயம்புவை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. அப்படிக் கவனித்தவர்களும் அவன் எப்படி வந்தான் என்பது மாதிரியும் பார்க்கவில்லை. பிள்ளையாருக்கு, பெரிய பெரிய வேலைகள். ஆறுமுகப் பாண்டிக்கு அவசர அவசரமான ‘சோலிகள். வெள்ளையம்மா, பந்திப் பக்கம். கோமளம், எங்கிருக்காளோ..?

சுயம்பு துள்ளிக் குதித்து அக்காவின் அறைக்குள்ளே போனான். அவளைச் சுற்றி ஒரு பெரிய பெண் வட்டம். அதற்குள்ளும் சின்னச் சின்ன வட்டங்கள். அவன் அந்த வியூகங்களை அபிமன்யூ மாதிரி உடைத்துக்கொண்டு, உள்ளே போனான். “ஆம்புள இப்படியா இடிச்சுட்டு வாறது என்று பல பெண்கள்-குறிப்பாக வெளியூர் சொந்தங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அக்காவைப் பார்த்தான்.

அவள் ஜெகஜோதியாய் மின்னினாள். பின்னலை மறைக்கும் சரஞ்சரமான பூக்கள். உச்சந்தலையில் வெள்ளி வளைவு. ஒளிய்டிக்கும் கம்மல். ஒளிவிடும் சிவப்புமூக்குத்தி. கண்ணொளி ஒரு பக்கம். பொன்னொளி மறுபக்கம். நீல மஞ்சள் காஞ்சிப் பட்டின் உடலொளி ஒரு பக்கம்.அக்கா காசுமாலையும், கழுத்துமாய் ஒட்டியாணமும் இடுப்புமாய் ஒளியாய், ஒளிரும் ஒளியாய் மின்னினாள். அபிராமிபட்டர் வர்ணிக்கும் அம்பாள் மாதிரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/191&oldid=1249660" இலிருந்து மீள்விக்கப்பட்டது