பக்கம்:வாடா மல்லி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சு. சமுத்திரம்


பாத்திமாவுக்கு நடக்கிறது மாதிரி பூஜை நடக்கும். அப்புறம்தான் அதெல்லாம்.”

பச்சையம்மா, மூச்சு விட்டபோது, சுயம்பு அவள் சொன்னதைக் காதுகளில் ஏற்றிக்கொண்டாலும் கருத்தில் ஏற்காததுபோல் கிடந்தான். அப்போதுதான், அவன் ‘உம்’ கொட்டாமல் இருந்ததை நினைத்த பச்சையம்மா, அவனைத் தன் பக்கமாய் நிமிர்த்தினாள். அவன் கண்கள் நீரிட்டன. உதடுகள் துடித்தன. அவள் அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். மனசுக்கும் ஒத்தனம் போட்டாள்.

“ஒடஞ்சக் கல்லு ஒட்டாது மவளே. பிரிஞ்ச உமி நெல்லோட சேராது மவளே. நான் இருபத்தஞ்சு ரூபாய அந்த பத்தாவது வகுப்புக்காரிக்கிட்ட கொடுத்தப்போ நீ என்ன பைத்தியக்காரின்னு கூட நினைச்சிருப்பே. நீயும், வேலையில சேர்ந்து நல்லா இருக்கிறதா அட்ரலோட எழுதியும் பார்த்தேன். அப்படியும் “மனுதாரர் பணத்தை வாங்க மறுக்கிறார்” என்கிற எழுத்தோட பணம் திரும்பி வந்ததைப் பார்த்தாவது, நீ திருந்தனும். நீ அவளை பாசத்தோட அக்கான்னு நினைக்கிறதாலேயே, அவள், உன்னை தம்பின்னு துடிக்கிறதா ஆயிடாது. ஒருத்தரப் பத்தி, நாம அவங்க மேல வச்சிருக்கிற பாசத்தை வச்சு தீர்மானிக்கோம். இது தப்பு. ஒருத்தர நம்ம விருப்பத்துக்கு தக்கபடி பார்க்காமல், அவங்க விருப்பத்துக்கு தக்கபடி எடை போடணும் மவளே.”

சுயம்பு மெள்ள முணுமுணுத்தான்.

“ஒருவேளை அக்காவுக்கு தெரியாம இல்லன்னா அவளைக் கட்டாயப்படுத்தி.” -

“முள்ளுல சேல பட்டாலும், சேலையில முள்ளு பட்டாலும் சங்கதி ஒண்ணுதானே மகளே!”

“அப்போ எப்பவுமே என் அக்காவ, எங்க அம்மாவ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/242&oldid=1249952" இலிருந்து மீள்விக்கப்பட்டது