பக்கம்:வாடா மல்லி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சு. சமுத்திரம்


இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்களை, சம்திங்காக’ பார்த்துக்கொண்டு, “இந்த மைனர் பொட்டை சொல்லுற மேஜர் பொட்டைய ஏன் விட்டீங்க?” என்றார்.

உடனே ஒரு போலீஸ் இன்னொரு சலூட் அடித்துக் கொண்டு “சத்தியமா ரெண்டே ரெண்டுதான்” என்றார். இப்படித் தன்னை வம்பில் சிக்க வைத்த சுயம்பு கவனிக்கப் படவேண்டிய விதத்தில் கவனிக்கப் படுவான் என்பதுபோல் அந்த போலீஸ்காரர் அவனை பயமுறுத்திப் பார்த்தார். பச்சையம்மா, வாயில் ஊறிய ரத்தத்தை துடைத்துக் கொள்ளாமல் சுயம்புவின் வீங்கிப்போன நெற்றிப் பொட்டைத் தடவிவிட்டாள். பிறகு ஏங்கி ஏங்கி அழுதாள். அந்த அவல ஒலியின் பின்னணியில் இன்ஸ்பெக்டர் போர்க்குரல் கொடுத்தார்.

“ஏண்டா பொட்டை அமைச்சருங்க. ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க நடமாடுற இடத்துல நடமாடக்கூடாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ அரவானுக்கு அறுக்கதுமாதிரி நான் அமைச்சருக்கு தாலி அறுக்கணுமா... பாரிமுனை பாலத்துக்குப் போக வேண்டியதுதானடா... ஒனக்கு புத்தி சொல்ற போலீஸ்காரங்க நாயா...? அந்த அளவுக்கு ஒனக்கு திமுரு: போலீஸ், மாமா மச்சான்னு நெனச்சிட்டே. இந்தாப்பா. இவங்கள கவனிக்கிற விதமா கவனியுங்க..”

பச்சையம்மாவையும், அவள்மேல் கிடந்த சுயம்புவையும், காலால் ஒரு எத்து எத்தி, மறுபக்கம் தள்ளிப்போட்டு விட்டு, இன்ஸ்பெக்டர் வெளியே புறப்பட்டார். அதற்குமேல் அவர்களை அடிக்கவில்லை. அவருடைய அந்தஸ்துக்கு அவ்வளவுதான் முடியும். இதற்குமேல் துப்பாக்கிதான் அவருடைய அந்தஸ்து! ஆகையால் லத்திக் கம்பிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/254&oldid=1250226" இலிருந்து மீள்விக்கப்பட்டது