பக்கம்:வாடா மல்லி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 247


சுயம்பு எழுந்தான். தலையில் முக்காடு போட்டுக் கொண்டான். மஞ்சள் ஆடை கட்டிய ராமலிங்க சுவாமிகள் மாதிரியான தோற்றம். போலீஸிடமிருந்து தப்பிக்க, அந்தச் சேரியின் சேரிக்குப் போகவேண்டும் என்ற ஒரு சின்ன எண்ணம் கூட அவனுக்கு ஏற்படவில்லை. அதை நினைப்பதற்கே மறுத்தான். அந்த வாசத்தை ஏதோ ஒரு கெட்ட கனவு என்றே நம்பினான். அங்கே போவதைவிட எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஆனாலும் அந்தப் பச்சையம்மா மேல் ஒரு பச்சாதாபம்.

ஏதோ ஒரு ரயில் கூச்சலிட்டது. அது, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதுபோல், அதை நோக்கி ஒடினான். கண்ணுக்குத் தெரிந்த போலீஸ் தொப்பிகளில் அவனைக் கட்டியடித்தவர்களும் இருப்பதாக அவனுக்கு ஒரு அனுமானம். அவர்களும் தன்பக்கம் நகர்வதுபோன்ற எண்ணம். அவன் ஓடினான். அந்த ரயில் பெட்டியில் ஒரு பிடியைப் பற்றியபோது, கால்கள் தரையில் உராய்ந்தன. உள்ளே நின்ற யாரோ இரண்டு பேர், அவன் கையைப் பற்றி உள்ளே இழுத்துப் போட்டார்கள். பயணிகளின் இருக்கைக்கு அப்பாலுள்ள எல்லைப்புறம். நான்கைந்து பேர் நின்றார்கள். அத்தனைபேரும், வாழ்க்கையைத் தொலைத்தவர்களாய், அல்லது அதற்குள் தொலைந்தவர் களாய்த் தோன்றினார்கள். அந்தப் பக்கம் வந்த பயணிகள் அவர்களை முறைத்துப் பார்த்தார்கள்.

28

ரயில், தாலாட்டாய் ஓடியது. தடா தடாவாய் ஒடியது. அதன் சத்தத்தைப் பலர் தங்களின் மனோபாவத்திற்கு ஏற்ப ஒலியமைத்துக் கொள்ளலாம், ‘போறேனே... போறேனோ’ என்றோ, ‘அய்யாவே... அம்மாவே’ என்றோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/269&oldid=1250326" இலிருந்து மீள்விக்கப்பட்டது