பக்கம்:வாடா மல்லி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சு. சமுத்திரம்


சுமையையும் பறிக்கப்போன ஆட்டோ புரோக்கர்களை தமிழில் திட்டிவிட்டு, “ஆபீஸ் கார் ஆயகா. ஆபீஸ் கார் வரும்” என்று ஒரு பொய்யை ஆசையாகச் சொல்லிவிட்டு, ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார்கள். சுற்றிலும் தமிழ் இல்லாஒசை. ஒன்றும் புரியாத அச்சாக்கள். அந்த அந்நியக் கூட்டத்தில் சுயம்புவிற்கு அந்தத் தம்பதியர் தன்னைப் பெற்றவர்கள் போலவே தோன்றியது. பிறர் பேசும் முன்பு பேசிப் பழக்கப் படாதவன், அவர்கள் முன்னால் போய் நின்றான். ஏதோ ஒரு தமிழ்ப் பாசம். தனித்துப் போய்விடவில்லை என்ற ஆறுதல் அவர்களிடம் முகம் கூப்பிக் கேட்டான்.

“சார் நீங்க தமிழா.” “ஆமா.. அதுக்கென்னயா இப்போ...”

சுயம்புவிற்கு, அப்பா போட்ட சூடு நினைவுக்கு வந்தது. அண்ணன் கொடுத்த அடி, நெஞ்சுக்குள் தாண்டவமாடியது. ஆனாலும், அவர்கள் அடித்துவிட்டு அணைப்பவர்கள். இவர்களோ, அதற்குமேல் அவனிடம் முகம் கொடுக்க மறுத்து, போலீஸ் கண்காணிப்போடு ஆட்டோ, டாக்ஸிகளில் ஏறும் பயணிகள் வரிசையில் முன்னோக்கி நகரும் மனித மூடிகள்.

சுயம்பு, வெறுமையோடு ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தான். சுற்றுப்புறம் அற்றுப்போனதுபோல் பார்த்தான். இதுவேதான் தனக்குச் சுற்றம் என்பது போலவும் எண்ணினான். ஆங்காங்கே தமிழ் பேசிக் கொண்டே நடந்தவர்களின் அருகே நடந்து பார்த்தான். ஒரு தள்ளு வண்டியில் மிளகாய்ப் பொடி தூவிய வெள்ளரிக்காய்களை கவ்வியபடியே தமிழை வடிகட்டிப் பேசியவர்களைப் பார்த்தான். பீடிகைப் பேச்சாக ‘டைம் என்ன சார் என்று கேட்டுப்பார்த்தான். பார்க்கப்பட்ட தமிழ் முகங்கள் எல்லாம் இந்தி மயமாயின. இவனுக்குப் பாராமுகமாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/272&oldid=1250345" இலிருந்து மீள்விக்கப்பட்டது