பக்கம்:வாடா மல்லி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 251


சுயம்பு இப்போது தமிழ் வேறு, தமிழன் வேறு என்பதுபோல் நின்றவர்களை நெடுமரமாய்க் கருதி அங்குமிங்குமாய்ப் பார்த்தான். சிறிது தொலைவில், ஆகாயப் பாலத்தில் இரண்டு ஜோடி பஸ்கள். எதிரும் புதிருமான வாகனங்கள். அதற்குக் கீழே பின்வாங்கிய இடத்தில் ஆரிய சமாஜ் ரோடு என்ற இந்திப் போர்டுகளைச் சுமந்த டி.டி.சி. பஸ்கள். நமது பல்லவனின் சகாக்கள். சுயம்பு அந்தப் போர்டைப் பொறுத்தவரை ஒரு தற்குறி. ஆனாலும் அந்த பஸ் வந்து திரும்பி நின்றது. அதற்குள், ஆடுமாடுகள் கூட அப்படி ஏறாது. டில்லி மனிதர்கள் பெண்டாட்டியைக் கூட கீழே தள்ளிப்போட்டு விட்டு படி ஏறுவது போலிருந்தது. இந்த பஸ்ஸிற்கு எதிர்ப்புறம் நான்கு இருக்கைகள் கொண்ட சைக்கிள் ரிக்ஷா மாதிரியான யந்திர பட்பட்’கள். இவை போட்ட கூச்சல்கள். திரும்பிப்பார்த்தால், மோடாக்கடைகள். சோபா செட் போட்ட தேநீர்க் கடைகள். பாய்லருக்குப் பதிலாக ஸ்டவ் அடுப்பில் அவ்வப்போது கைப்பிடி உள்ள ஒரு ஈயப் பாத்திரத்தில் பாலையும் வெந்நீரையும் கொட்டித் தயாரிக்கப்படும் திடீர் உள்:ண பானங்கள். நடுத்தெருவிலேயே சூட்கோட் போட்டிருந்தவர்கள் கூட, அங்கேயே ஒளிவு மறைவு இல்லாமல் வெந்த முட்டைகளைத் தின்று கொண்டிருந்தார்கள். பல்வேறு வித சத்தங்கள். யந்திரச் சத்தம். ஒரு மந்திரச் சத்தம். ஒடும் சத்தம். இருமும் சத்தம். பேச்சே இல்லாத பெருஞ்சத்தம். ஆக மொத்தத்தில் அந்தப் பகுதி மொழியின்றிப் பேசிக்கொண்டிருந்தது.

சுயம்புவுக்கு இலக்குப் புரியவில்லை. அந்த அம்மா சொன்னதுபோல், மீண்டும் அதே ரயிலைப் பிடித்து ஊருக்குப் போகலாமா என்று ஒரு சின்னச் சிந்தனை. மனதிற்குள் போட்ட அந்த விதை, மரமாய் மாறுமுன்பே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/273&oldid=1250360" இலிருந்து மீள்விக்கப்பட்டது