பக்கம்:வாடா மல்லி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சு. சமுத்திரம்


அவன் அதை முளையிலேயே கிள்ளிவிட்டான். இருபத்து ஐந்து ரூபாய்க்கும் பெறாதவன் அவன்.

சுயம்புவின் கண்கள் மீண்டும் பொங்கின. கழுத்திற்குள் ஏதோ ஒன்று உள்பிடி போட்டது போன்ற நெரிச்சல். கருப்பாய் ஏதோ ஒன்று உருண்டு திரண்டு, அவன் உடல் முழுவதையும் ஆக்கிரமிப்பது போன்ற தள்ளாமை, அக்காவைப் பற்றிய சிந்தனை. எக்கா... எக்கா...’ நான் இருக்குமிடம் ஒனக்குத் தெரியுமா அக்கா. நான் தவிக்கும் தவிப்பு ஒனக்குத் தெரியுமாக்கா. நீ அங்கிருந்து என்னையும், நான் இங்கிருந்து ஒன்னையும், ஒளி வேகத்தில் - விநாடிக்கு ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் மைல் வேகத்தில் பார்ப்பதாய் நினைக்கேன் அக்கா. உன் கை நீண்டு நீண்டு, நீள நீள அதுவே அழகாகி இங்கிருந்தபடியே, என் தலையைக் கோதிக் கொடுப்பதாய் தவிக்கேன் அக்கா. நானும் என் தலையை... கால்களை நகர்த்தாமலே கொக்குபோல் நீட்டி, நீட்டி, ஆகாய மின்கோடாய் ஆகி ஆகி, ஒன் மடியில் முகம் வைக்கேன் அக்கா. முகமறியா மனிதரக்கா. ஒவ்வொருவரும் இங்கே அந்நியமாய்ப் படும்போது, நீ நெருங்கி நெருங்கி வாறேக்கா. அக்கா. ஒன்னைப் பார்ப்பேனோ மாட்டேனோ. பார்ப்பேன்னு வாழவா. பார்க்கமாட்டேன்னு சாகவா.

சுயம்பு பொங்கிப் பொங்கிக் குமுறுவதை சுற்றுமுற்றும் நிற்பவர்கள் பார்ப்பது போலிருந்தது. ஆனாலும், அவனை வேடிக்கையாகப் பார்க்கவில்லை. இதெல்லாம் சகஜம் என்பது மாதிரியான பார்வை.

சுயம்பு மெள்ள நகர்ந்தான். அந்த ஆகாயப் பாலத்தில் அடிவார வீதியில் நடந்தான். பார்வையற்ற நடப்பு. பாதம் மட்டுமே இயங்கும் பயணம். கால்கள் முன் ஏக ஏக, நினைவுகள் பின்னோக்கிப் போயின. அப்பாவுக்குத் தலைக்குனிவு. அக்காவுக்கு நிராசை... அம்மாவுக்கு மயக்கம்... தங்கைக்குத் தாழ்த்தி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/274&oldid=1250363" இலிருந்து மீள்விக்கப்பட்டது