பக்கம்:வாடா மல்லி.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

சுயம்புவை பெளர்ணமிப்பதற்கான சித்ரா பெளர்ணமி.

அந்த அறையில் ஒரு சுவரில் சுயம்பு சாத்தி வைக்கப்பட்டான். உடல் அளவில் நிர்வாணப்பட்டு, நிர்க்கதியாய் நின்றான். நின்றானில்லை. நிறுத்தி வைக்கப்பட்டான். பிறந்தமேனிக் கோலம் போட்டவன், எதிரே கண்ணில் பட்டதைப் பார்த்துக் கதறப்போனான். ஆனால் அவனது நீண்டு வளர்ந்த தலைமுடியே அவன் வாயில் திணிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த முடிக் கற்றைகள் வழியாகத்தான் அவன் அரைகுறைப் பார்வை போட வேண்டியிருந்தது. அந்தப் பார்வையில்கூட அந்த அரிவாள் மின்னியது. ஒரு முழு நீளமுள்ள வெட்டரிவாள். பார்த்தால் முகம் தெரியும். தொட்டால் ரத்தம் வரும். அதைப் பிடித்துக் கொண்டு நின்ற அலியும், அசல் தாடகை மாதிரி கோர சொரூபம். சுயம்பு அனிச்சையால் துள்ளப் போனான். அவனைப் பிடித்தவர்கள் அங்குமிங்குமாய் இறுக்குகிறார்கள். முடியின் பிடி வலுத்தது. அவன், அப்படியும் கத்தப் போனபோது, வாயிலிருந்த தலைமுடி கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. உள்நாக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

சுயம்பு அங்குமிங்குமாய்ப் புரளப் போனான். இரண்டு அலிகள் இருபக்கமும் அவன் கைகளை இழுத்துப் பிடித்திருந்தனர். இடுப்புக்குக் கீழே அதில் ஒரு கருப்புக் கயிறு முடிச்சாகி, இரு பக்கமும் நீண்டிருந்தது. முகமறியா இரண்டு அலிகள் அந்தக் கயிற்றின் இருமுனைகளையும் இழுத்துப் பிடிப்பதற்காக, தங்கள் உடம்புகளையும் முறுக்கோடு நிறுத்தி வைத்தார்கள். அந்தக் கயிற்றின் ஆதாரத்திலேயே அவர்கள் நிற்பது போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/301&oldid=630394" இலிருந்து மீள்விக்கப்பட்டது