பக்கம்:வாடா மல்லி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 9


“ஏய்யா இப்படி மிருகமாகுறே. என்னன்னு விசாரிக் காமல் இப்படியா எடுத்த உடனே அடிக்கது?

“ஓங்க பெண்டாட்டி பக்கத்திலே இப்படி ஒருத்தன் ஒட்கார்ந்தா, நீங்க பொறுப்பீங்களா?”

“ஏங்க இங்க வாங்க. அந்த ஆளு அறிவில்லாமப் பேசறான். நீங்களுமா அறிவில்லாம நிக்கது?”

“இந்தாம்மா. அவன் இவன்னு பேசாதீங்க. இவன் ஒங்களை இப்படிப் பண்ணியிருந்தா...”

“பண்ணியுமாச்சு... குதிரையுமாச்சு... மொதல்ல அந்தப் பொண்ணை விசாரி. அவளே திட்டம் போட்டு சோடி சேரச் சொல்லியிருக்கலாம். இப்போ ஒன்னைப் பார்த்து பயத்துல அந்த அப்பாவியக் காட்டிக் கொடுக்கலாம். ஊரு ஒலகத்துல பார்க்கத்தானே செய்யுறோம்?”

இப்போது, அடித்தவன் உட்பட அத்தனைபேரும், அந்த இளஞ்சிட்டை சந்தேகமாய்ப் பார்த்தார்கள். அவளோ, முகத்தைக் கைகளால் மறைத்துக்கொண்டே, விம்மி விம்மி வெடிவெடியாய் அழுதாள். அவள் “உண்மை” சொல்லப் போகிறாள் என்று, எல்லோரும் அந்தரங்க விருப்பத்தோடு பார்த்தபோது, அவளோ, “சத்தியமாய் எனக்கு எதுவும் தெரியாது. இவன் யாரோ? நான் யாரோ? என்று மாறி மாறியும், மாற்றி மாற்றியும் சொல்லி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமாய் அழுதாள்.

அவனுக்கு - அதுதான் அவளருகே உட்கார்ந்து அடிவாங்கிய சுயம்புக்கு அழுகை தாங்க முடியவில்லை. நிலமை அவனுக்கு புரிவது போலிருந்தது. அடித்தவனை ஏறிட்டு நோக்கிவிட்டு, அதே கண்களை அத்தனைபேர் மீதும் படரவிட்டு, அலங்கோலமாய் விக்கி விக்கிச் சொன்னான். ரத்தக்கசிவு வாயோடு, திக்கித் திக்கிச் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/31&oldid=1248830" இலிருந்து மீள்விக்கப்பட்டது