பக்கம்:வாடா மல்லி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சு. சமுத்திரம்


கோபம் இருக்கதை ஒன் பார்வையாலேயே தெரிஞ்சுக்கிட்டேன். நீ இந்தத் தியாகத்திற்கு சம்மதிச்சது நம்மோட அலி சமுதாயத்தின் பொது வாழ்க்கைக்கு அவசியப்பட்டது. முழுப் பெண்ணான சேலா அலிகளில் யாரையும், தத்து எடுக்காமல், பாதிப் பெண் போல் இருந்த உன்னை தத்து எடுத்தால், நம் சமுதாயம் என்னையே மதிக்காது. நம் சமூகத்தில் வெட்டுப்படாதவங்க வெட்டுப்பட்டவங்கள விட ஒரு படி தாழ்த்தி, லுங்கி கட்டுறவங்க, சேலைகட்டுறவங்களைவிட, அந்தஸ்துல சின்னவங்க... என் சிஷ்யைகள் ஒன்ன தாழ்வா பார்க்கக் கூடாதுன்னுதான் இதுக்கு ஏற்பாடு செய்தேன். என்னமோ தெரியல... ஒன்னப் பார்த்த உடனேயே என்னோட மலட்டு வயித்துல ஒரு துடிப்பு. என் வாழ்நாளுல எனக்காக நான் செய்துக்கிட்ட ஒரே ஒரு நன்மை, ஒன்ன நான் தத்து எடுத்துக்கிட்டதுதான்.”

“என் கண்ணே... நான் அடிக்கடி பேசுறவள் கிடையாது. என்னப்பற்றித் தம்பட்டம் அடிப்பதும் கிடையாது. ஆனாலும், மகளான ஒன்கிட்ட சொல்லியா கணும். நீயாவது கொடுத்து வச்சவள். நான், என்னையே யார்னு தேடிக்கிட்டு முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னால இங்க வந்தேன். ஜமீன் குடும்பத்துல ‘சூடு” வச்சாங்க... ஒனக்கு இரும்புச் சூடுன்னா... எனக்கு வெள்ளிச்சூடு.

எப்படியோ, அங்கே இருந்து, தப்பிச்சு கர்நாடகத்துல பெல்காம் பக்கத்துல இருக்கிற எல்லம்மா கோவிலுல நம்மள மாதிரி பாவப்பட்ட தேவதாசிகளோடு இருந்தேன். அப்புறம் டெல்லி. அப்போ இது ஒரு காடு. என் நிலயப் புரிஞ்சுக்கிட்ட, பலர் என்னை ஆட்டிப் படைச்சாங்க. ஒவ்வொரு குரு அலியும் இன்னொரு குரு அலிகிட்ட என்ன அடிமையா வித்தாங்க. அடி அடின்னு அடிச்சாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/310&oldid=1250858" இலிருந்து மீள்விக்கப்பட்டது