பக்கம்:வாடா மல்லி.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 சு. சமுத்திரம்


பச்சையம்மாவின் நினைவு வந்தது. போலீஸ் வேனில் ஏறும்போதுகூட, அவள் ‘மகளே, மகளே என்று கூக்குரலிட்டது இப்போது சந்தோஷத்திற்குச் சிறிது தாழிட்டது. பச்சையம்மாவும் ஒரு அம்மாதான். சின்னம்மா. உடனே சுயம்புவுக்குத் தனது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துப் பெருமைப்படுவதுபோல் ஒரு கற்பனை. ஆனால், இது பெருமைக்குரிய விஷயந்தானா என்று சந்தேகம். இறுதியாக, டேவிட் குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்துக் கையை ஆட்டி ஆட்டிக் காட்டுகிறான். முத்தம் கொடுக்கப் போவதுபோல் உதடுகளைக் குவிக்கிறான். டேவிட். என் டேவிட்! இந்தப் பட்டுச்சேலை நல்லா இருக்கா டேவிட். எக்கா. நீ மட்டுமே வாழவேண்டிய இந்த மனசுல யாரைப்பற்றியெல்லாமோ நெனைக்கேன் பாரு... என்னை மன்னிச்சிடுக்கா!

இதற்குள், நீலிமா, அவன் முகத்தைத் திருப்பிப் பேச்சுக் கொடுக்கிறாள். அப்புறம் சுயம்பு, அவள் காட்டிய திசையில் பார்க்கிறான். சுலோச்சனாக்கா. அழுகிறாளா, சிரிக்கிறாளா ! இவன் கையாட்டிக் கூப்பிட்டபோது, எல்லாக் கண்களும் அவளை மொய்க்கின்றன. உடனே அவள் லேசாய் தலையாட்டிவிட்டு, கூட்டத்தில் கரைந்துவிடுகிறாள்.

புரோகிதி, கங்காதேவியின் காதில் கிசுகிசுத்தாள். அப்போதுதான் தேவிக்கே அந்த எண்ணம் வந்தது. மகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும். என்ன பேர் வைக்கலாம். கங்காதேவிக்கு தனது பாட்டி பேரான சீத்தாதேவி பெயரை வைக்க ஆசை. ஆனாலும் சுயம்புவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுயாட்சி சிந்தனை. சுயம்புவின் காதில் கிசுகிசுத்தாள்: என்ன பெயர் வைக்கலாம்?

சுயம்பு பின்னால் நிற்கும் தன் சிநேகிதிகளைப் பார்க்கிறான். ஒவ்வொரு யோசனைக்கும் தலையாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/316&oldid=1250864" இலிருந்து மீள்விக்கப்பட்டது