பக்கம்:வாடா மல்லி.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 303


அடிக்கக்கூடக் கையை ஓங்கினாள். ஆனால், யதார்த்தம், அவள் விருப்பத்திற்கு விரோதமாகக் கூத்தாடியது. கோரதாண்டவமிட்டது.

கடைகள் ‘டப்டப் பென்று மூடப்பட்டன. ஆங்காங்கே சாலைகளில் ஒடிய பஸ்கள் அப்படி அப்படியே நின்றன. மக்கள் கும்பல் கும்பலாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருசில இடங்களில் மயான அமைதியோடு கூடிய நடை. இன்னும் சில இடங்களில் ‘குய்யோ முறையோ என்ற கூப்பாடோடு ஒடிய மனிதக் காலடிச் சத்தங்கள். கங்காதேவி நிலை குலைந்தாள். நம்ப முடியாதது, நடந்துவிட்டது. அரவான் தன்னைத்தானே காவுக்குச் சம்மதம் கொடுத்ததுபோல் , அம்மாவும் தன்னையே காவு கொடுத்து விட்டாள். எல்லாத் தலைவர்களும் மானிடத்தின் மூன்றாவது தரப்பைப் பற்றித் தெரியாமலும், தெரிந்துகொள்ள விரும்பாமலும், அலிகளை அலட்சியப்படுத்தியபோது இந்த அன்னை, அவர்களை அரவணைத்தவள். இன்னும் உயிரோடு இருந்தால், என்னவெல்லாமோ செய்திருப்பாள். செய்தாலும் செய்யாவிட்டாலும், பரவாயில்லை. அவள் உயிரோடு இருந்திருந்தால் அதுவே அவள் செய்தது மாதிரி.

கங்காதேவி, கனத்த சிந்தனையுடன் முர்கே மாதாவை முறைத்துப் பார்த்தாள். பிறகு அந்தத் திட்டில் ஏறி, குடைசாய்ந்து கிடந்தாள். கீழே நின்ற அலிகளோ ‘மாதா மாதா.. எதுக்குமே பிரயோசனப்படாத எங்களை எடுத்துட்டு எங்க அம்மாவைக் கொடுத்துடும்மா’ என்றார்கள். பலர், தத்தம் முகத்தில் மாறிமாறி அடித்துக்கொண்டார்கள். இந்தத் தாக்கத்தில் தன் முகத்திலும் அடிக்கப் போன கங்காதேவியை, மேகலை பிடித்துக் கொண்டாள். நீலிமா பின்னால் வந்து தாங்கிக்கொண்டாள். முர்கே மாதாவிடம், கங்காதேவி தலையை அவலத்தனமாக ஆட்டியபடியே முறையிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/325&oldid=1250878" இலிருந்து மீள்விக்கப்பட்டது