பக்கம்:வாடா மல்லி.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 சு. சமுத்திரம்


ரெளடி நாய் அதைக் கடிக்காது. ஆனால் மனுஷன் அப்படியா...? கும்பிடக் கும்பிட வெட்டுறானம்மா.. எந்தக் காலுல சரணாகதியா விழுறானோ அந்தக் காலாலயே விழுந்தவன் தலைய மிதிக்கானம்மா... மனுஷனை மிருகம்னு சொல்றது தப்பும்மா.. மிருகங்கள் ரொம்ப நல்லதும்மா.”

மேகலை, அந்தப் பகுதியில் தான் கண்ட காட்சிகளை விவரித்தாள். இருவரும் கண்ணிரும் கம்பலையுமாக ஒருவர் முகத்தை ஒருவர் துடைத்தபோது நான்கைந்து அலிகள் அவர்களுக்கு முன்னால் வந்து கும்பிடு போட்டார்கள்.

“நாங்க போபாலுல இருந்து வாரோம். முர்கே மாதாவுக்கு ஒரு கோவில் கட்டுற விஷயமா...”

“ஆமா. உங்க லெட்டர் கிடைச்சது. கோவில் கட்ட எவ்வளவு செலவாகும்.”

மேகலை அவசர அவசரமாய்க் குறுக்கிட்டாள். “எம்மா. முர்கே மாதாவுக்கு கோவில் கட்டட்டும். வேண்டான்னு சொல்லல. ஆனால் அந்தக் கோவிலோட கோவிலா, நம்மள மாதிரி பிறப்பெடுத்து சூடுபட்ட வங்களுக்கும், தெருவுல தூக்கியெறியப்பட்டவங்களுக்கும் ஒரு சத்திரமும் சேர்த்து கட்டனும்னு சொல்லுங்கம்மா.”

“என் ராசாத்தி. இந்தத்திட்டம் எனக்கு வரல பாரு. சரி அப்புறமா இவங்ககிட்ட பேசி மொத்தம் எவ்வளவு ஆகுன்னு கணக்கு பாரு... பாதிச் செலவ நாம குடுத்துடலாம்.”

“சரிம்மா. பாதில பாதிய இப்ப குடுப்போம். அப்புறம் வேலை எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சு மீதியை அப்புறம் கொடுக்கலாம். தப்பா பேசிட்டேனாம்மா.”

“இல்லடி என் செல்லப் பொண்ணு. தெக்கத்திப் பொண்ணுங்களே புத்திசாலிங்கதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/340&oldid=1250901" இலிருந்து மீள்விக்கப்பட்டது