பக்கம்:வாடா மல்லி.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 சு. சமுத்திரம்


தானே ஒரு பாவமானது போன்ற உட்பார்வை. எதையோ தேடிக்கொண்டிருப்பது போன்ற கண்கள். வெறுமனே உடம்பைவிட்டு, உள்ளுக்குள் யாரையோ பேசவிடுவது போன்ற தோரணை. முகத்தில் லேசான முற்றல். விவேகமோ. விரக்தியோ!

“சுயம்பு. ஏன் அப்படிப் பார்க்கிறே? எனக்கு நீ எப்பவுமே சுயம்புதான். உன் மருமகனுக்கு ஆசீர்வாதம் கொடு. இன்னிக்கு அவன் பிறந்த நாள். இப்போ கூட்டமா இருக்கும். அப்புறமா போகலாம்னா கேட்டாத்தானே. நம்ம காலம் மாதிரியா! நமக்கெல்லாம் பெத்தவங்க சொல்லுதான் வேத வாக்கு.”

“இல்லக்கா. அப்பவும் நான் அடங்காப் பிடாரிதான். கேட்கலை. கேட்க முடியலை. போகட்டும், வாடா என் மருமகனே!”

மேகலை காலைத் தொட்ட சிறுவனுக்கு, நெற்றியில் குங்குமமிட்டாள். கூடவே ஒரு எண்ணம். என் அண்ணன் மகளும் இவனைவிட பெரிசா வளர்ந்திருப்பாள்.

மேகலை, நீலிமா காதில் கிசுகிசுத்தாள். அதைச் சிரமப்பட்டுக் குனிந்து கேட்ட நீலிமா, அந்தச் சிறுவனைக் கூட்டிக்கொண்டு உள்ளே போனாள்.

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். அலிகள் அல்லாத மனிதர்களும் வந்தார்கள். ஒரு கட்டத்தில், தாயும் மகளுமான இரு அலிகள். பெரியவளுக்கு அழுகை, சின்னவளுக்கு முறைப்பு. சுவிகாரம் எடுத்தவள் புலம்பினாள்.

“நம்ம முறைப்படி தாயான நான் இவள அடிக்கலாம். இவள் என்னை எப்படித் திருப்பி அடிக்கலாம்?”

அங்கே நின்றது அதட்டலோடு கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/346&oldid=1250907" இலிருந்து மீள்விக்கப்பட்டது