பக்கம்:வாடா மல்லி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சு. சமுத்திரம்


பட்டன. மரக்கையில் ஒரு இரும்பு திரிசூலம் பொறுத்தப்பட்டது. அவர் உள்ளே கருவறைக்குக் கொண்டு போகப் பட்டார். அங்கே இருந்து ஒரே ஒரு கருப்புப் பூசாரி நூற்றுக்கணக்கான மஞ்சள் துண்டுக் கயிறுகளோடு வெளியே வந்தார். கீழே உட்கார்ந்து அவரும் நான்கைந்து சேலா பூசாரிகளும் கயிறுகளில் மஞ்சள் துண்டுகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். உடனே அவள்கள் நாலா பக்கமும் இருந்து குவிந்தார்கள். சின்னக் கருவறைக்குள் இடம் போதவில்லை. இதற்குள் உள்ளூர் மீனவ தர்மகர்த்தாக்கள் ஒவ்வொருத்தியையும் அவள் மினுக்கத் திற்கு ஏற்ப குரல் போட்டார்கள். நகைக்காரிகளுக்கு ஒரு யாசக சத்தம். பட்டுப் புடவைக்காரிக்கு ஒரு தடவல், வாயில் புடவைக்கு ஒரு அதட்டல். கூரைப்புடவைக்கு ஒரு குத்து.

நூற்றுக்கணக்கான மொந்தைப் பூக்கள் ஆயிரக்கணக்கான கோணத்தில் சுயமாய் ஆடுவது போன்ற தோற்றம். ஆயிரமாயிரம் மனிதத் தலைகள், ஒரே ஒரு உருவம் பெற்றது போன்ற நெரிசல்; ஆனாலும் எப்படியோ வரிசை விரிவானது. உள்ளேயும் ஒரு பூஜாரி. புகை மூட்டத்திற்குள் புகைந்து போனவர். கருவறைக்குள் வந்த அலிகளுக்கு, மஞ்சள் துண்டு கொண்ட மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டார். உள்ளே தாலி போட்டவள்கள் வெளியே நின்ற வெறுங்கழுத்துகளை ஏளனமாய்ப் பார்த்தன.

சிறிது ஒதுங்கி நின்ற மேகலையைச் சுட்டிக்காட்டி, ஜமாத்தலைவி சுந்தரம்மா மூத்த தர்மகர்த்தா ஒருவரிடம் ஏதோ சொன்னாள். அவள், கார் வைத்திருப்பதை வார்த்தையாலும் சொல்லி, இரண்டு கைகளையும் ஸ்டியரிங் மாதிரி வைத்து அங்கேயே கார் ஒட்டுவது போலக் காட்டி, படம் போட்டுக் கதை சொல்வதுபோல் சொன்னாள். உடனே அந்த தர்மகர்த்தா மேகலைமீது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/360&oldid=1251091" இலிருந்து மீள்விக்கப்பட்டது