பக்கம்:வாடா மல்லி.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 சு. சமுத்திரம்


அசந்துபோன, சுந்தரம்மா மேகலையைத் தூக்கி விட்டாள். அவளைச் சுற்றியும் பற்றியும் புலம்பிய டெல்லிக்காரிகளுக்கு ஆறுதல் சொன்னாள்.

“கவலைப்படாதீங்கடி... மனசுல நீண்ட நாளா அடைச்சு வச்சிருந்தது இப்ப உடைச்சிட்டு வந்திட்டு. இதுவும் ஒரு வகையில நல்லதுக்குத்தான். இனிமேல் ஒவ்வொரு வருஷமும், கூட்டி வாங்க... இல்லேன்னா இவளோட இருதயம் பலூன் மாதிரி வெடிச்சுடும்.”

“நேற்று வந்ததும் வராததுமா சிலர் அன்னதானம் நடத்துறதப் பார்த்துட்டு அடுத்த வருஷம் நாமும் அப்படி நடத்தனும்னு சொன்னவளா இப்படி அழுகிறது.”

“அழுகிறவள் தாண்டி மனுவி. இல்லாட்டி அமுக்கடி கள்ளி. அவள், கதைய என்கிட்டவும் சொன்னாள். சொந்த ஊருக்கு அவளக் கூட்டிட்டுப் போங்க. அக்காவைப் பார்த்தால், பித்தம் தெளியும்.”

ஒப்பாரியை விட்டுவிட்டு லேசாய் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்த மேகலை அவர்களைப் பார்த்துக் கூரைப் புடவைக்காரியின் பாட்டையே மீண்டும் ஒப்பாரியாக்கினாள். சிறிது மாற்றி, ஓலமிட்டாள்.

“அப்பனுக்கு வேப்பங்காய்...

அண்ணனுக்கு எட்டிக்காய்;

தமைக்கைக்கு விஷக்காய்...

தங்கைக்கோ கண்டைக்காய்...”

அவள், புலம்பலைப் பார்த்துவிட்டு, அத்தனை அலிகளும் புலம்பினார்கள். ஒட்டுமொத்தமாய் ஒப்பாரி வைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/368&oldid=1251098" இலிருந்து மீள்விக்கப்பட்டது