பக்கம்:வாடா மல்லி.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 சு. சமுத்திரம்


“நாளைக்கு டவுன்ல. ஒன் பேரு என்னடா... மோகனா. சட்டுனு ஞாபகம் வரல. நாளைக்கு நீ என் கூட கோணச்சத்திரத்துக்கு வா. ஒன்பேர்ல பாங்க்ல ஒரு அக்கவுண்ட் போடணும். கோல்ட் கார்டு வச்சிருக்கேன். உன்பேர்ல ஐம்பதாயிரம் ரூபாய் கட்டிடுறேன். அந்த வட்டியில நீ படிக்கணும். மற்ற செலவுக்கு நான் மாதா மாதம் அனுப்புறேன். நீ என் கண்ணு முன்னாலய என்ஜினியராகணும். அப்புறம் அண்ணாச்சி அப்பாவ நாளைக்கே டவுன்ல ஆஸ்பத்திரியில சேர்க்கணும்... எவ்வளவு செலவானாலும் சரி. மோகனா கலியாணத் துக்கு எவ்வளவு கேட்டாலும் சரின்னு சொல்லுங்க... டெல்லிக்குப் போனதும் பணம் அனுப்பி வைக்கேன். மோகன். இங்க வாடா. என் மருமகளே நீயும் இவனும் இப்படித்தான் தோராயமா இருப்பீங்கன்னு உங்களுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்.”

பிள்ளையார், இப்போது கொஞ்சம் தெளிவாகப் பேசினார்.

“நாங்களும் ஒன்ன படாதபாடு படுத்திட்டோம். அப்புறம் டாக்டருக்கு படிக்கிற பையன் டேவிட் சொன்னப்புறம்தான் எனக்கே புரிஞ்சுது... நீ தனிப் பிறவியாம். நீ போன வேகத்துலய சேலையக் கட்டிட்டு வந்திருந்தாக்கூட சேர்த்திருப்பேன். நீ எந்தத் திசையில போனேன்னுகூட தெரியாம போச்சே ஒரு லட்டர் போடக்கூடாதாடா? இவ்வளவு பணமும் ஏதுடா...”

“நான் ஒங்க ரத்தம்பா, கட்டுக்குத்தகைக்கு எடுக்கிற நிலத்து வெள்ளாமையில கால்படிகூட அதிகம் எடுக்காத வருக்குப் பிறந்தவன். ஒரு பைசாகூட தப்பான வழியில சம்பாதிக்கல. இப்போ டேவிட் எங்க இருக்கார். அந்த ஆம்பளப் பசங்க எப்படி இருக்காங்க..”

“டேவிட் ஆரம்பத்துல வந்தான். என்னமோ இங்க யாரும் முகம் கொடுத்து பேசுறதில்ல. அந்தப் பயல்களும் ரெண்டு மூணு தடவை வந்தாங்க. அதோட சரி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/382&oldid=1251112" இலிருந்து மீள்விக்கப்பட்டது