பக்கம்:வாடா மல்லி.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 சு. சமுத்திரம்


மேகலை கிழிந்த சேலைகளில் உடம்பே கிழிபட்டது போல் தோன்றிய அந்தப் பஞ்சைப் பராரிகளைப் பார்க்க மனமிருந்தும், முகம் அதற்கான திராணியை இழந்தது போல் நடந்தாள். அந்தக் குடிசை வாசலுக்குள் நின்று முர்கே தேவியின் படத்துக்கு முன்னால் காலும் தலையும் ஒன்றை ஒன்று தொட, முடங்கிக் கிடந்தவளைப் பார்த்து

“எம்மா...எம்மா...”

முடங்கிக் கிடந்த உருவம் கூப்பிட்ட குரல்காரியின் முகத்தைப் பார்க்காமலே ‘சுயம்பு.சுயம்பு என் மவளே என்று வாரிச்சுருட்டி எழுந்தது. மேகலையின் உடையையும் நகை நட்டுக்களையும் பக்கத்தில் நின்ற தோழிகளின் மிடுக்கையும் பார்த்து அணைக்கப்போன கைகளை அப்படியே வைத்துக்கொண்டது. அதற்குள் மேகலை ‘அம்மா அம்மா என்று அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி, அவளை அணைத்துக்கொண்டாள். சிக்கெனப் பிடித்துக் கொண்டாள். சிறுகச் சிறுக அழுகை, பதில் அழுகை பச்சையம்மா மேகலையின் முகத்தை நிமிர்த்தி, மாறிமாறி முத்தமிட்டாள். அவள் கையைத் தனது கையில் பிடித்துக் கொண்டே பாருங்கடி என் மவளை என்பது மாதிரி வெளியே பார்த்தாள். பச்சையம்மாவின் லட்சனக் கருப்பு முகமும், இப்போது மேக மூட்டமாய்த் தெரிந்தது. நாட்டுக்கட்டை உடம்பு சீக்குக் கட்டையாய் மாறி விட்டது.

இதற்குள் ‘குட்டி அலிகள், அங்குமிங்குமாய் ஒடி, நாற்காலிகளைக் கொண்டு வந்தன. மூன்றே மூன்று நாற்காலிகள்தான் கிடைத்தன. அதுவும் சராசரி சேரிக் காரர்களின் வீடுகளில் கிடைத்தவை. நீலிமாவும், நஸிமாவும் அதில் உட்காரப் போனபோது, மேகலை அவர்களைக் கொஞ்சலாகவும் கெஞ்சலாகவும் பார்த்துவிட்டு, குருவக்காவையும், பச்சையம்மாவையும், அவற்றில் பலவந்தமாக உட்கார வைத்தாள். பச்சையம்மா ஒப்பாரி போல் குரலிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/388&oldid=1251120" இலிருந்து மீள்விக்கப்பட்டது