பக்கம்:வாடா மல்லி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 21


புரியாத சுமையைப் பிறருக்குத் தெரியாமல் சுமப்பதுபோல் உச்சி முடி சிலிர்த்து நிற்க நின்றாள். சுயம்புவிற்கு, நான்கு ஆண்டுகள் மூத்தவள். ஒரு வட்டத்திற்குள் அடங்கும் முகம். வெள்ளொளி வீசும் கண்கள். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற தோரணை. அழுத்தம் திருத்தமான உடம்பு, தட்டையாக இல்லாமல், உருண்டு திரண்ட மார்பகம், பழுத்த - அதேசமயம், காயப் போடாத மிளகாய் நிறம்.

மரகதத்திற்கும், ஒரு பெரிய பிரச்னை. அவளை, அத்தை மகனுக்குக் கொடுப்பதா அல்லது தாய் மாமா மகனுக்குத் தாரை வார்ப்பதா என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே, நடுவர் இல்லாத ஒரு பட்டி மன்றம். ஆகையால் இப்போது இருவருமே பேசிக் கொள்வதில்லை. கடைசியில் மாமா மகன் இன்னொரு பெண்ணையும், அத்தை மகன் அடுத்த பெண்ணையும் கட்டிக்கொண்டதுதான் மிச்சம். உடனடியாக அப்பன் காரன் நாலைந்து பெரியவர்களோடு ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு நடத்தப் போனார். மறுவாரமே, ஒரு ஜீப்பில் ஒரே ஒரு பெண்ணும், ஆறு ஆண்களும் ஒன்று திரண்டு வந்து, அவளுக்குப் பூ வைத்து விட்டுப் போய்விட்டார்கள். பெண் கொடுக்கல் - வாங்கலில், பெரும்பாலும் உள்ளுரைத் தாண்டாத அந்த “சுய மகரந்த சேர்க்கை” ஊராருக்கு இந்த ஐம்பது கிலோ மீட்டர் தூர மாப்பிள்ளையே ஒரு அதிசயம். ஆனால், மருவியவள் மரகதம்தான். மாப்பிள்ளை எப்படியோ? கூனோ ? குருடோ? நொள்ளையோ? வெள்ளையோ? அவனது சொந்தக்காரர்கள் யாரும், இந்த ஊரில் இல்லாததால், அவன் எப்படி என்று அறிய முடியவில்லை. ஆகையால், முகமறியா ஒருத்தனிடம் முந்தானை விரிக்கப் போகிறோமே என்ற பயம். இடமறியா வீட்டில் இடறி விழப்போவது போன்ற தடுமாற்றம். இந்தச் சமயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/43&oldid=1248871" இலிருந்து மீள்விக்கப்பட்டது