பக்கம்:வாடா மல்லி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சு. சமுத்திரம்


இழுபட்ட அந்தக் குழந்தையை, சுயம்பு தன் பக்கமாய் இழுத்துக்கொண்டு அதன் தலையைத் தன் கழுத்திற்குள் வைத்துக்கொண்டு, ‘நீ சொன்னது மாதிரி செத்துட்டேம்மா. சித்தப்பாவா செத்துட்டேன்’ என்று அழுதான். அவன் அழுகைக்குத் தங்கைதான் காரணம் என்பதுபோல், ஏழு வயது உதயகுமார், எழுந்து போய், அதன் தலையைக் குட்டினான். குடும்பத்தினர் எல்லோரும் சுயம்புவை அதிர்ந்து பார்த்தார்கள். ஆறுமுகப்பாண்டி, எதுவும் புரியாமல் மனைவி கோமளத்தைப் பார்க்க, பதிலுக்கு அவள் அவனையே பார்த்தாள். அந்த வேப்பமரத்திற்குச் சிறிது தொலைவில் உள்ள வாதமடக்கி மரத்துளரில் உட்கார்ந்திருந்த கணவனை ஒரங்கட்டிப் பார்த்தபடியே, வெள்ளையம்மா சாடையாகப் பேசினாள். “இப்படிக் குத்துக்கல்லு மாதிரி எதுக்காக நிற்கணும். பெத்த பிள்ளை பொறி கலங்கி வந்திருக்கான். என்னடா ஆச்சுன்னு ஒரு வார்த்தை கேட்கப்படாதா?”

பிள்ளையார், கையிலிருந்த சுருட்டு, விரல் இடுக்கை எரிப்பதை உணரவில்லை. அந்த இரண்டு விரல்களும் செந்நிறமாகி, பிறகு வெண் தழலாய் மாறியதை அறியவில்லை. வழக்கம்போல் கம்பீரம் கலையாமல், ‘பெரிய மகன் ஆறுமுகப் பாண்டியைப் பார்த்து, கேட்டார்.

“ஏண்டா பெரியவன். இவன் எதுக்காக வந்தானாம்? எதுக்காவ அழுவறானாம்?

சுயம்பு அழுகையை நிறுத்தினான். அந்த வாதமடக்கி மரம்போல உறுதியாகவும், அதன் பட்டைகள் போலச் சிற்சில சுருக்கங்களாகவும் தோன்றிய தந்தையைக் குற்றம் சாட்டும் தோரணையில் பார்த்தான். பிறகு தந்தையைப் பார்க்காமலே, வீறாப்பாக பதிலளித்தான்.

“நான், இனிமேல் காலேஜுக்குப் போகமாட்டேன். போகமாட்டேன்னா போகமாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/46&oldid=1248875" இலிருந்து மீள்விக்கப்பட்டது