பக்கம்:வாடா மல்லி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 27


வைக்கப்பட்ட பனை நார்க்கட்டிலை, மல்லாக்கப் போட்டாள். சுயம்புவின் இரு தோள்களையும் இரு கை களால் அழுத்தி, அவனைக் கட்டிலில் உட்கார வைத்தாள். அவனோ, பிரமை பிடித்தவன்போல், கண்கள் திறந்திருந்தும் பார்வை படாது, காதுகள் உயிர்த்திருந்தும் ஒலிகள் பதியாது, பித்துப் பிடித்தவனாய்க் கிடந்தான். மரகதம், அவன் முன்னால் நின்று கீழே குனிந்து அவனை உலுக்கினாள். “தம்பி. தம்பி. உனக்கு என்னடா ஆச்சு” என்று கேட்டபடியே அழப்போனாள். பிறகு அழுவது அவனை மேலும் பலவீனப்படுத்தும் என்று நினைத்தவள் போல், நிமிர்ந்து வேறு பக்கமாய் முகம் திரும்பி கண்களைத் துடைத்துவிட்டு அவன் கழுத்தை கைகளால் கோர்த்துக்கொண்டே “ஏய். தம்பி, ஏய். தம்பி” என்று அதட்டினாள். உடனே அவன் அக்காவின் தோள்களில் இரண்டு கைகளையும் தொங்கவிட்டு கழுத்தில் முகம் போட்டு மாங்கு மாங்கென்று அழுதான். “அக்கா. அக்கா. உருப்படாமப் போய்ட்டேனே அக்கா!”

மரகதம், அவன் முகத்தைத் தூக்கி நிமிர்த்தினாள். கண்களை முந்தானையால் துடைத்துவிட்டாள். பிறகு தழுதழுத்த குரலில் கேட்டாள்:

“என்னடா இப்படி திடுதிடுப்புனு வந்து நிக்கே, என் கண்ணே உனக்கு திருஷ்டி பட்டிருக்கும் போலுக்கடா. பேசுடா தம்பி...”

“எக்கா. இனிமே நான் காலேஜுக்கு போக மாட்டேக்கா...”

“அய்யய்யோ.. எந்தப் பேச்சுப் பேசினாலும். அந்தப் பேச்சு பேசாதே.”

சுயம்பு, அக்காவைத் தள்ளிப் போட்டுவிட்டு துள்ளி எழுந்தான். சுவர் மூலையில் தலையைச் சாய்த்தபடியே கத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/49&oldid=1248878" இலிருந்து மீள்விக்கப்பட்டது